மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு 2 வருட சம்பள மானியம்: அரசாங்கம் அதிரடி முடிவு!

 


மாற்றுத்திறனாளிகளை தேசிய பொருளாதாரத்தில் பங்களிக்கச் செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில், அவர்களை வேலைக்கு அமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு 24 மாதங்களுக்கு (2 வருடங்கள்) ஊழியர் சம்பளத்தின் 50 சதவீதத்தை, அதிகபட்சமாக 15,000 ரூபா வரை மாதாந்த சம்பள மானியமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைய, இதற்கென 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சுமார் 5,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதே முதன்மை நோக்கமாகும்.
இதற்கமைய, மாற்றுத்திறனாளிகளின் விபரங்கள் மற்றும் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க விரும்பும் தனியார் துறை நிறுவனங்களின் விபரங்களை பதிவு செய்யும் ஆரம்ப நிகழ்வு மற்றும் “Next Dream” வேலைத்திட்டம் நாளை (22) வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு பத்தரமுல்ல செத்சிறிபாயவில் அமைந்துள்ள கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கேட்போர் கூடத்தில், அமைச்சர் உபாலி பன்னிலகே தலைமையில் நடைபெறவுள்ளது.