அறநெறி வகுப்புக்கள் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமையில் தனியார் வகுப்புக்களை தடைசெய்யுமாறு கோரி கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.







அறநெறி வகுப்புக்கள் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமையில் தனியார் வகுப்புக்களை தடைசெய்யுமாறு கோரி கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப் பாடசாலைகள் ஒன்றியத்தினால் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
 
கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப் பாடசாலைகள் ஒன்றியத்தினால் வழங்கப்பட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

மேற்படி ஒன்றியமானது கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் நீண்ட காலமாக செயற்பட்டு வருகிறது. 
எமது அறநெறிப்பாடசாலைகள் ஒன்றியம் எமது பிரதேசத்திலுள்ள அனைத்து கிராமங்களையும் ஒன்றிணைத்த 18 அறநெறிப் பாடசாலைகளை உள்ளடக்கியதாகும். இவ்வொன்றியத்தின் சார்பின் நாம் பணிவான 
கோரிக்கையொன்றினை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

இளம் இந்து சிறார்களின் மனங்களில் ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நற்பண்புகளை வளர்த்தல், கடவுள் நம்பிக்கையுடன் பிரார்த்தனை மேற்கொள்ள வழிகாட்டல், சமய அறிவை வளர்த்துக் கொள்வதற்கான 
போதனைகள் என்பவற்றை வழங்கி ஒழுக்க நெறிமுறை சார்ந்த சமூகத்தை உருவாக்குவதில் 
அறநெறிப்பாடசாலைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

 நாட்டிற்கு நற்பிரஜைகளை உருவாக்கும் நோக்கத்தை கொண்டு மத வழிபாட்டு தலங்களும் சமய நிறுவனங்களும் அறநெறிப் பாடசாலைகளை அமைத்து நிர்வகித்து வருகின்றன. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப அனைத்து மாணவர்களுக்கும் அறநெறிக்கல்வியை 
வழங்கும் நோக்குடன் சகல மதங்களையும் சேர்ந்த திணைக்களங்கள் அறநெறிக்கல்வி திட்டத்தை 
செயற்படுத்தி வருகின்றன.

அந்தவகையில் சகல மதங்களுக்கும் பொதுவானதாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நண்பகல் வரை அறநெறிக்கல்வி செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு இடையூறாக தனியார் 
கல்வி நிலைய உரிமையாளர்களும், பிரத்தியேக வகுப்புக்களை மேற்கொண்டு வரும் பல ஆசிரியர்களும் 
தொடர்ந்தும் தடையாக உள்ளமை மிகுந்த மனவேதனையை தருகின்றது. 

இதன்காரணமாக அறநெறிப் பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி காணப்படுவதுடன் தொடர்ச்சியாக பாடசாலைகளில் மேலதிக வகுப்புகள், அதிகமான பிரத்தியேக வகுப்புக்கள் என மாணவர்கள் 
ஓய்வின்றி சென்று செயற்படுவதால் பாரிய அளவில் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.  இவ்வாறான நிலை தொடர்ந்து வருவதனால் எமது பிள்ளைகளின் சமய அறிவும், பண்பாடும் பின்னடைவை சந்திப்பதுடன் எமது 
சமயத்திலுள்ள தர்ம சிந்தனைகளையும் அறக்கருத்துக்களையும் அறியாதவர்களாய் சமூக விராதச் செயல்களில் ஈடுபடுவதுடன் பிறரை மதிக்கும் பண்பும் அற்றவர்களாக கணிக்கப்பட்டு சமூகத்தால் ஒதுக்கப்படும் அளவுக்குத் தள்ளப்படுகின்றனர். குறித்த விடயம் தொடர்பாக பல வேறு சந்தர்ப்பங்களில் இது தொடர்பில் கலந்துரையாடல்கள், தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை எமது பிரதேசத்தில் இதுவரை 
நடைமுறைக்கு வரவில்லை. அவை பத்திரிகை, ஊடகங்கள் வாயிலாக வெறும் செய்திகளாக மட்டுமே 
இடம்பெற்று வருகின்றது.

இந்த வகையில் அறநெறிக் கல்வியை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தும் நோக்கில் எமது இந்துசமய கலாசார 
அலுவல்கள் திணைக்களம் அறக்கருத்துக்கள் நிறைந்த பல நூல்களை வருடாந்தம் வெளியிட்டு மாணவர்களுக்கு வழங்குகிறது. எனவே இதன் பலாபலனை பிள்ளை சிறு பராயம் முதலே கற்றுணர வேண்டும். 
இதற்கு அறநெறிப்பாடசாலைக்கு தவறாமல் செல்ல வேண்டும். இந்நிலையிலும் எமது 
அறநெறிப்பாடசாலைகளை சேர்ந்த ஆசிரியர்கள் எவ்வித எதிர்பார்ப்புக்களும் இன்று எதிர்கால சந்ததியை 
நல்வழிப்படுத்தும் நோக்குடன் அர்ப்பணிப்பான சேவையினை வழங்கி வருகின்றனர். இதனை பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது எமது நாட்டில் அதிகரித்து வருகின்ற இனமத முரண்பாடுகள், போதைப்பொருள் பாவனை, மற்றும் வன்முறையான சமூகத்திலிருந்து இளம் சமுகத்தினரை காப்பாற்றி மனிதநேயம், சமத்துவம், நல்லிணக்கம் உள்ள எதிர்கால சமூகம் ஒன்றை உருவாக்குவது அனைவரது தலையாய கடமையாகும். 

இதனடிப்படையில் பின்வரும் விடயங்களை தங்களின் மேலாக கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். பிரதி ஞாயிற்றுக்கிழமை முழுநேரம், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளை மற்றும் பூரணை தினம் 
மற்றும் சமய விசேட தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை முழுமையாக தடைசெய்தல். (ஏனெனில் அறநெறிக்கல்வியுடன் மாணவர்கள் குடும்பசகிதம் ஆலயங்களுக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட 
வாய்ப்பளிக்கும் பொருட்டு அதனை நடைமுறைப்படுத்தல்)

அறநெறிப்பாடசாலை வேளைகளில் சில பாடசாலைகளில் நடைபெறும் சதுரங்கம், யோகா, 
சிலம்பாட்டம், கராத்தே, மேலதிக நேர வகுப்புக்கள் முதலானவற்றை தடைதல் அவசியம். (ஏனெனில்
இவ்வாறான செயற்பாடுகள் அறநெறிக்கல்வி பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவை 
திணைக்களத்தால் பயிற்சி நெறியாக இடம்பெற்றும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது)

அறநெறிப்பாடசாலை வேளைகளில் மாத்திரம் விளையாட்டுக்கழகங்களால் மேற்கொள்ளப்படும் விளையாட்டு நிகழ்வுகளை தடைசெய்தல். இவ்வாறான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதேச மட்டத்தில் சிறந்த பொறிமுறை ஒன்றினை உருவாக்குதல்.

எனவே மேற்படி எமது கோரிக்கையினை ஏற்று நம் எதிர்கால சமூகத்தின் நலனை கருத்தில்கொண்டு உரிய 
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இதன் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுனர், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், வாழைச்சேனை பிரதேச செயலாளர், கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி அலுவலகம், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

 ந.குகதர்சன்