''கார்க் தீவு மோதலால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.''

 



ஈரானின் எரிபொருள் துறையின் இதயமாகக் கருதப்படும் கார்க் தீவு (Kharg Island) மீதான தாக்குதல்கள், வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தியின் மீது ஈரான் பதிலடி கொடுக்க வழிவகுக்கும் என 'Foreign Reports' அமைப்பின் துணைத் தலைவர் மெத்யூ ரீட் எச்சரித்துள்ளார்.
 
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து முடக்கினால், அடுத்த இலக்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களாக இருக்கலாம் என அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இந்த மோதலால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி மசகு எண்ணெய் நாள் ஒன்றுக்கு சுமார் 10 மில்லியன் பீப்பாய்கள் வளைகுடா பிராந்தியத்தில் தேங்கிக் கிடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் நாளொன்றுக்கு 4 மில்லியன் பீப்பாய்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) நாளொன்றுக்கு 11 முதல் 12 பில்லியன் கன அடி எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதற்கு மாற்று வழிகள் எளிதில் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவாக 400 மில்லியன் பீப்பாய் அவசர கால எண்ணெய் இருப்பை வெளியிடத் தீர்மானித்துள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து மெத்யூ ரீட் கூறுகையில் "இந்த எண்ணெய் சந்தைக்கு வரும்போது, அது மிகக் குறைவாகவும், மிகத் தாமதமாகவும் இருக்கக்கூடும். இது ஒரு சிறிய காயத்திற்கு ஒட்டப்படும் சாதாரண பிளாஸ்டர் (Band-aid) போன்றது மட்டுமே." என குறிப்பிட்டுள்ளார்.