மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரும் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை நேற்று வியாழக்கிழமை (26) இரவு மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரே யருடன் கைது செய்ததுடன் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்த சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மற்றும் ஸ்பிரே, மாத்திரைகள் என்பவற்றை மீட்டுள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்துள்ளார்.
கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல்போனதா மற்றொரு பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்தும், மற்றும் இளம்தாயின் 3 வயது சிறுமி வயல் பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை முன்னெடுத்தனர்.
இதன்போது வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பியார் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி, திருகோணமலை, வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட 5 பேரை 24 மணித்தியாலத்தில் பொலிசார் கைது செய்தவுடன் இரு ஆட்டோக்கள் கார் ஒன்று மற்றும் கோடாரி, கூரிய ஆயுதங்களை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட இவர்களை கடந்த 2ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது தங்க ஆபரண கடைகளின் உரிமையாளர் இருவரையும் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறும், கொலை கொள்ளையில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரையும் 72 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு செய்வதற்கு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி வழிகாட்டலில், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களிடம் தொடர் விசாரணைகளின் போது, கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டின் பகுதியில் நிலத்தில் மயக்க மருந்துக்களை புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரேயர் வழங்கி வைத்துள்ளதாகவும் வெளி மாவட்டத்தில் உள்ள ஒருவரிடம் இருந்து இந்த மயக்க மருந்தை பல ஆயிரம் ரூபா பணம் செலுத்தி பெற்றுக் கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டை முற்றுகையிட்டு நிலத்தில் இரண்டு அடி ஆழத்தில் பாதுகாப்பாக பொலித்தீன் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சையின் போது பாவிக்கப்படும் 6 மயக்க மருந்துகளை கொண்ட போத்தல் மற்றும் மயக்க மாத்திரைகள், மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்டு 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கைது செய்ததுடன் அவரது வீட்டின் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கொள்ளையர்கள் வழங்கிய மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரேயர் போத்தல் ஒன்றையும் குற்ற செயலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





