'எரிவாயு விநியோகம் முடக்கப்பட்டால் - உலக நாடுகள் ஸ்தம்பிக்கும்

 


ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போர் இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால், மசகு எண்ணெய் விலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயரக்கூடும் என 'Foreign Reports' அமைப்பின் துணைத் தலைவர் மெத்யூ ரீட் எச்சரித்துள்ளார்.
 
தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் 100 டொலராக உள்ள நிலையில், போர் நீடித்தால் இது 120 டொலர் முதல் 150 டொலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

போர் இன்று நிறுத்தப்பட்டாலும், சந்தை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் காலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஈரான் போர்நிறுத்தத்தை அறிவித்து, கப்பல்களைத் தாக்குவதை நிறுத்தினாலும், இயல்பு நிலை என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்," என மெத்யூ ரீட் சுட்டிக்காட்டியுள்ளார்.

எண்ணெய் விலை 150 டொலரைத் தொட்டால், அதன் விளைவாக எரிபொருளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு சந்தையில் அதன் தேவை தானாகவே வீழ்ச்சியடையும்.

அத்துடன் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி ஸ்தம்பிக்கும்.

எண்ணெய்யை விட இயற்கை எரிவாயு (LNG) சந்தை மிக மோசமான நிலையில் உள்ளது.

கட்டார் நாடு தனது உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதால், உலகின் 20 சதவீத திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தற்போது விநியோகிக்கப்பட முடியாமல் முடங்கியுள்ளது.

குறுகிய காலத்தில் இதற்கு மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது என நிபுணர்கள் கூறுகின்றனர்.