இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியவற்றில் 7,500 புதிய வேலைவாய்ப்புகள்.

 


இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) ஆகியவற்றில் நிலவும் வெற்றிடங்களுக்காக சுமார் 7,500 புதிய ஆரம்பநிலை (Trainee) உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2026 மார்ச் 27 ஆம் திகதியிடப்பட்ட 2482 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள்கள், விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள், உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் (சாரதிகள்) ஆகிய பதவிகளுக்காக இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள தகுதியுள்ள இளைஞர் மற்றும் யுவதிகள் இந்தப் பதவிகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை www.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, ‘Join Us’ என்ற தெரிவின் ஊடாக அல்லது வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஒன்லைன் (Online) முறையில் மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 மே மாதம் 08 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை 071-8591925, 011-2505202 அல்லது 011-2552953 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும்.

நாட்டின் சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்டி, தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தங்களை அர்ப்பணிக்கத் தயாராக உள்ள ஒழுக்கமான மற்றும் சுறுசுறுப்பான இளைஞர்களை இந்த உன்னதமான பொலிஸ் சேவையில் இணையுமாறு பொலிஸ் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.