
உலகின்
முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் என்று அழைக்கப்படும் “சுவாமி
விபுலானந்தர்” சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய பெரும் ஞான
விருட்சமாவார்.
தமிழையே
மூச்சென்று சுவாசித்தார். இவர் ஆற்றிய தமிழ் பணிகளும் சமூக சேவைகளும் இவரை
உயர் நிலைக்கு இட்டு சென்றது. ஆசிரியராக, தமிழ் பண்டிதராக, விஞ்ஞான
பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை
பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்து
தமிழுக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றினார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் காரைதீவு எனும் பழம்பெரும் ஊரில் 1892 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 27 ஆம் திகதி இவர் பிறந்தார்.
இவரது தந்தையார் பெயர் சாமித்தம்பி தாயின் பெயர் கண்ணம்மா ஆவார்.
அடிகளார்
1892.03.27ஆம் திகதி இவ் அவனியில் அவதரித்து 1947.07.19ஆம் திகதி மகா
சமாதி அடைந்தார். இன்றுடன் அவர் இவ் வையகத்தில் அவதரித்து 134
வருடங்களாகின்றது.அவர் மகாசமாதியடைந்து 79வருடங்களாகின்றன. ஆக இப்
பூவுலகில் வாழ்ந்த காலம் 55வருடங்கள்.
இயல்இசைநாடகம் ஆகிய முத்தமிழிலும் சிறந்து விளங்கிய காரணத்தால் முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்பட்டவர் சுவாமி விபுலாநந்தர்.
இவரது
இயற்பெயர் மயில்வாகனன் என்பதாகும். ஆரம்ப கல்வியை கல்முனை மெதடிஸ்த
கல்லூரியில் கற்றார். பின்னர் மட்டக்களப்பு மைக்கல் கல்லூரியில் கற்று
பின்பு அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார்.
மதுரை
தமிழ் சங்கம் நடாத்திய தேர்வில் சித்தி பெற்று மதுரைத் தமிழ்ச்
சங்கபண்டிதர் பட்டம் பெற்றார். இலங்கையில் இருந்து இந்த பட்டத்தை
பெற்றுக்கொண்ட முதல் நபர் இவராவார்.
இலங்கையைச் சேர்ந்த இராமகிருஷ்ண மிஷனின் முதலாவது துறவியும் இவரே.
யாழ்ப்பாணம்
யோகர் சுவாமிகளினுடைய பழக்கம் துறவுள்ளம் படைத்த மயில்வாகனத்தை
விபுலானந்தர் ஆக்கியது. இவர் துறவு பூண்டாலும் மக்களை விட்டு விலகவில்லை.
சமூகத்தில் நிகழ்ந்த துன்பத்திலும் மகிழ்ச்சியிலும் பங்கெடுத்தவராவார்.
இராமகிருஷ்ண
மிஷனில் 1922 இல் இணைந்து “பிரபோத சைதன்யர்” என்ற பெயருடன் ஆச்சிரம
வாழ்க்கையை முடித்து "சுவாமி விபுலானந்தர்" எனும் குரு பட்டத்தை
இராமகிருஸ்ணரின் நேர் சீடரான சுவாமி சிவானந்தரிடம் இருந்து பெற்று
கொண்டார். தன் குருவின் ஞாபகார்த்தமாக மட்டக்களப்பு கல்லடியில் சிவானந்தா
வித்தியாலயத்தை நிறுவியிருந்தார்.
அந்நியர் ஆதிக்கத்தில் மதம், மொழி கலாச்சாரத்தில் இருந்த வீழ்ச்சியில் இருந்த தமிழ் சமூகத்தை இவர் தட்டி எழுப்பினார்.
அறிவியல்
கல்வியானது தமிழில் போதிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் இவரிடம் இருந்தது.
இவர் அறிவியல் கலை சொல்லாக்கத்துக்காக உழைத்திருக்கின்றார். "யாழ்நூல்"
என்று மிகச்சிறந்த இசை இலக்கியத்தை இவர் படைத்திருக்கிறார்.
இது
பழந்தமிழரின் இசைக்கருவியான யாழ் பற்றி சிறந்த ஆராய்ச்சி நூலாக
போற்றப்படுகின்றது. 14 ஆண்டு ஆராய்ச்சியின் பலனாக இந்த நூல் கிடைத்தது.
தமிழ்சங்கம் வெளியிட்ட செந்தமிழ் எனும் இலக்கியத்தில் பல கட்டுரைகளை இவர்
எழுதி இருந்தார்.
இவர்
தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தெளிவாக கற்று அவற்றின் பெருமைகளை
மக்களுக்கும் புரியும் படியாக தனது நூல்களிலும் கட்டுரைகளிலும் இவர் எழுதி
இருந்தார்.
மகாகவி
பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் அவரை முதன்மைப்படுத்தி தனது வாழ்வில்
வாழ்ந்து காட்டினார். மகாகவி என்ற நாமத்தை சூட்டிய வரும் சுவாமிகளே.
தாழ்த்தப்பட்ட
மக்களும் மேன்மையடைய வேண்டுமென்று விரும்பினார். நவீன மனிதனுக்குத்
தேவையான பழங்கால சிந்தனைகள் என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்
வாய்ந்தவையாக உள்ளன.
முத்தமிழை முதன்மைப்படுத்தி இவர் எழுதிய நூல்களும் ஆய்வுகளும் பெரும் புகழ் உடையனவாக காணப்படுகின்றன.
இவ்வாறு
மிகச்சிறந்த தமிழ்ப்பணிகளை ஆற்றி தமிழையே பெருமைப்படுத்திய விபுலானந்தர்
அவர்கள் 1947 ஆம் ஆண்டு யூலை மாதம் 19 ஆம் திகதி உடல்நலக் குறைவினால்
இறைபதமடைந்தார்.
இவரது சமாதி கல்லடி சிவானந்தா வளாகத்தில் அமைந்துள்ளது.
இவரது
புகழ் என்றும் நிலைத்திருக்கும் ஈழத்தில் பிறந்து ஒட்டுமொத்த தமிழ்
சமூகத்துக்கு இவர் ஆற்றிய பணிகள் அளப்பெரியன என்றால் மிகையல்ல.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
ஆலோசகர் & முன்னாள் தலைவர்,
சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணி மன்றம்
காரைதீவு.











