இக் கலந்துரையாடலில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் குறிப்பாக வலுசக்தி பங்குடமை மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட ஆழமான மற்றும் வளர்ந்து வரும் பங்குடமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல்கள் இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டன. முதலாவது அமர்வில் வலுசக்தி பங்குடமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், சிந்தன் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரும் முன்னாள் உலக வர்த்தக அமைப்பு மற்றும் இந்திய நிர்வாக அதிகாரியுமான சிஷிர் பிரியதர்ஷி மற்றும் இலங்கை மின்சார சபையின் நிலைமாற்றம் தொடர்பான பணிக்குழுவின் தலைவர் புபுது நிரோஷன் ஆகியோர் இதில் நிபுணத்துவக் கருத்துக்களை முன்வைத்தனர். மின் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி மற்றும் கூட்டு ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் உள்ளிட்ட வலுசக்தி ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.
இரண்டாவது அமர்வின் போது, இந்து சமுத்திரத்தின் மூலோபாய முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கடல்சார் ஒத்துழைப்புக் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் துறையில் நிலைபேறான ஒத்துழைப்பு, கடல்சார் மையமாக இலங்கையின் சாத்தியக்கூறுகள் மற்றும் அது தொடர்பான சவால்கள் குறித்து இக்கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன. சிந்தன் ஆராய்ச்சி மன்றத்தின் ஆய்வாளர் கலாநிதி சவி வசிஷ்ட் மற்றும் கடல்சார் ஆய்வாளரும் இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) வை.என். ஜயரத்ன ஆகியோர் இது தொடர்பான நிபுணத்துவக் கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்தக் கலந்துரையாடல்களை ஃபெக்டம் (Factum) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒமர் ராஜரத்னம் வழிநடத்தினார். இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் எதிர்காலச் செயற்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு தொழிநுட்ப ஆதரவை ஃபெக்டம் (Factum) நிறுவனம் வழங்கியது.
இதில் இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவரும் கௌரவ அமைச்சருமான (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் (கலாநிதி) சத்யஞ்சல் பாண்டே,
இராஜதந்திரிகள் மற்றும் இரு நாடுகளையும் சேர்ந்த கொள்கைசார் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
ந.குகதர்சன்
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)




