இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல புராண விகாரையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரதான செயலாளர் வண. முகுனுவெல அனுருத்த தேரர் இதனைத் தெரிவித்தார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
மே மாதம் 01 ஆம் திகதி 'விசா' நட்சத்திரம் இல்லாத காரணத்தினால், அந்தத் தினத்தை வெசாக் போயா தினமாக அறிவிப்பது உகந்ததல்ல எனத் திரைனிக்காய மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறியப்படுத்தியிருந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, போயா குழுவின் பரிந்துரைக்கு அமைய மே 30 ஆம் திகதி வெசாக் தினமாகத் தீர்மானிக்கப்பட்டதாக, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன கடந்த ஜனவரி 24 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





