நாட்டில் இடம்பெற்ற வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை உண்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, இறந்த விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இலங்கை அலுவலகம் முக்கிய பொதுச் சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதில், வெள்ளம், நோய் அல்லது காயம் காரணமாக இறந்த விலங்குகளின் உடல்களை சரியாக கையாளாமல் விட்டால், அவை மனிதர்களுக்கு தீவிர சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதனால், வெள்ளத்திற்குப் பிறகு காணப்படும் இறந்த மீன்கள் உட்பட எந்தவொரு விலங்கின் உடலையும் பொதுமக்கள் தொடுவது, எடுத்து சேகரிப்பது அல்லது உண்பது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இறந்த விலங்குகள் தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், முதலில் பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது உள்ளூர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்வோருக்கு கையுறை, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம்.
மேலும் சவர்க்காரம் மற்றும் சுத்தமான நீரால் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற கடுமையான சுகாதார பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் இலங்கை கிளை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





