அரச திணைக்களங்கள் மற்றும்
அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும்
அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்
என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய, அதிதீவிர
வானிலை காலப்பகுதியிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அரச
திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களின்
அறிவித்தல்கள் அனுப்படுகின்றமை தொடர்பில் எமது செய்தி சேவை வினவிய போதே
அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மத்திய, ஊவா மாகாணம் உள்ளிட்ட தமிழர்கள்
செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம்
அறிவிப்புகள் விடுக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், எமது செய்திச் சேவை, அமைச்சரை தொடர்பு கொண்டு வினவியது.
இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர்,
மும்மொழிக் கொள்ளையைப் பின்பற்றுமாறு அனைத்து அரச அலுவலகங்களுக்கும்
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
எனினும், கடந்த நாட்களில் அதனைப் பின்பற்றியிருக்கவில்லை என்றால் அது குறித்து ஆராய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், விடயம் தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் விடுத்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
அதற்கமைய நாளை முதல் அனைத்து அரச
அலுவலகங்களிலும் வெளியிடப்படும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும்
வெளியிடப்பட வேண்டும் என்பது தொடர்பில், தாம் பணிப்புரை விடுப்பதாகவும்
அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.





