அனர்த்த அழிவின் மீள் கட்டுமான பணியில் உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்றிணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT) இந்த அழைப்பை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகளாவிய புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அனர்த்த அழிவின் மீள் கட்டுமான பணியில் செயல்படுமாறு FGT அழைப்பு விடுத்துள்ளது.
இன்றைய நிலையில் உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவி மிக அவசியமாகியுள்ளது என தனது அறிக்கையில் FGT தலைவர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இது சாதாரண உதவி கேட்கும் தருணம் அல்ல என குறிப்பிட்ட அவர், தமிழர் ஒற்றுமை வெளிப்பட அமைப்புகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சிக்கு உதவித் திட்டங்களை திட்டமிட்டு பொறுப்புடன் செயல்படுத்த ஏழு பேர் கொண்ட பணிக் குழு ஒன்றை FGT அமைத்துள்ளது.
இந்தத் குழு களத்தில் உள்ள அவசரத் தேவைகளை மதிப்பாய்வு செய்தல், களத்தில் நம்பகமான கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுதல், நிதி, வளங்களை ஒருங்கிணைத்தல், உதவிப் பொருட்களை தெளிவான முறையில் விநியோகிக்கப்படுவதை கண்காணித்தல், தமிழ்ப் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு சமகால தகவல் வழங்குதல் ஆகிய பொறுப்புகளை ஏற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





