அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள
நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
வங்கிக் கணக்குகளுக்கு மாத்திரம் நிதி உதவிகளை வைப்பிலிடுமாறு கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படும் நிதிக்கு மாத்திரமே அரசாங்கம்
நேரடியாகப் பொறுப்புக் கூறும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதனைத் தவிர்த்து, அமைப்புகள் அல்லது
தனி நபர் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படும் நிதிக்கான அனுமதியோ
அல்லது, அங்கீகாரமோ வழங்கப்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிலவிய அதிதீவிர வானிலையால்
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காகப் பல நன்கொடையாளர்கள்
முன்வந்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களால் வழங்கப்படும் நிதியை உரியவாறு
வெளிப்படைத் தன்மையுடன் முகாமைத்துவம் செய்வதற்காகவே வங்கிக் கணக்குகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மாணவர்களுக்கான நிதிப் பங்களிப்புகளைப்
பெற்றுக்கொடுக்கும் போது, அதன் நம்பகத்தன்மை குறித்து மக்கள் அவதானத்துடன்
செயற்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் வங்கிக்கணக்கு பற்றிய
தகவல்களுக்கு www.donate.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து
தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.





