யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்தபோது மூழ்கிய பேரூந்தில் பயணிகளை காப்பாற்றிய யாழ் இளைஞன் சடலமாக மீட்பு

 


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கடந்‌த வெள்ளிக்கிழமை கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி மூழ்கியிருந்தது. அதில் காணாமல் போயிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன்   மூன்று நாட்களுக்கு பின் இன்றைய தினம்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த துயர சம்பவத்தில் காணாமல் போன தனிகசலம் பத்மநிகேதன் என்ற  36 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கலா ஓயா பகுதியில்  கடும் மழை வெள்ளத்தில் சிக்கி மூழ்கியது. அதிலிருந்த பயணிகள் அப்பகுதியிலிருந்த கட்டிட கூரையின் மேல் ஏறி தமது உயிர்களை பாதுகாத்திருந்தனர். ஒரு நாளின்  பின்னர் அவர்கள் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர் 

பின்னர் நொச்சியகம மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் 

இந்த நிலையில் , குறித்த நபரின் பெயர்  மருத்துவமனை அனுமதி பட்டியலில் இல்லை என்பதால் உறவினர்கள் அவரை தேடத்தொடங்கினர். 

அவர்  இறுதியாக  வெள்ளிக்கிழமை மாலையில் தொலைபேசியில் பேசியுள்ளார். பேருந்தில் பயணிகள் இருக்கும் காணொளியிலும் கட்டட கூரைமேல் இருக்கும் பயணிகளில் குறித்த நபரும் இருக்கும் காட்சிகள் வெளியாகியிருந்தன. அதை காண்பித்து உறவினர்கள் தேடும் போதே அவர் காணாமல் போனது தெரியவந்துள்ளது. 

கட்டிடத்தின் கூரை ஒரு தருணத்தில் முறிந்ததாகவும் அப்போது அவர் சிலரை காப்பாற்றியதாகவும் பயணிகள் கூறியுள்ளனர். அதே நேரம் அவர் வெள்ளத்தில் விழுந்திருக்கலாம் என சந்தேகித்திருந்தனர் .

இந்த சம்பவம் தொடர்பாக நொச்சியகம காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில்  குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் மிகுந்த கவலையுடன் குறித்த நபரை  கடந்த  3 நாட்களாக தேடி வந்ததனர்.

இந்த நிலையில் குறித்த நபர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.