பேரிடரால் பாதிக்கப்பட்டு எட்டு முகாம்களிலுள்ள 935 குடும்பங்களுக்கு உதவிப்பொருட்கள்! பசறையில் இருந்து இகிமி.சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் தகவல்

 








 பேரிடரால் மோசமாக பாதிக்கப்பட்ட மலையகத்தின் பசறை ,லுணுகல மற்றும் பதுளைப் பகுதிகளில் உள்ள எட்டு முகாம்களிலுள்ள 935 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக உலருணவு உள்ளிட்ட உடைப்பொதிகளை இன்று முதல் வழங்க விருக்கிறோம் என்று உலகளாவிய இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் தெரிவித்தார்.

கடந்த ஐந்து நாட்களாக பசறை பகுதியில் முகாமிட்டு தங்கி உள்ள சுவாமி ஜீ குழுவினர்  இதுவரை 12 முகாம்களை பார்வையிட்டு அவற்றுள் 8 முகாம்களை பொறுப்பேற்று அவர்களுக்கு உலருணவு மற்றும் சாறன் பெட் சீட் சாறி போன்ற உடுதுணி நிவாரண பொருட்களை  வழங்க இருக்கின்றார்கள்.

பசறையில் இருந்து இகிமி.சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் மேலும் தெரிவிக்கையில்..

நாங்கள் நான்கு தினங்களாக இங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் மற்றும் உளவள ஆற்றுப்படுத்தும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறோம். அவர்களுக்கு முதலில் சாறன் சாறி துவாய் பெட் சீட் மற்றும் பெண்களின் சுகாதார துணிகள் போன்றனவே தேவையாகிறது.

மட்டக்களப்பில் இருந்து எமது பொருட்கள் லாரியில் வந்து கொண்டிருக்கின்றன .
அவற்றை இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்.

மடுல்சீமை 120 குடும்பங்கள் , பட்டவத்த 180 குடும்பங்கள், லுணுகல விக்னேஸ்வரா 162, சோழன்ஸ்87 , மீதுன்பிட்டிய 80, கோணாகல125, தங்கமலை 110, தெவிறனிய 65 ஆகிய முகாம்களில் வாழும் மக்களுக்கும் விசேடமாக ஆறுபேருக்குமாக மொத்தம் 935 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கப்படவுள்ளது.

இது தவிர உடைமைகள் முழுவதும் சேதமடைந்த 27 தனி குடும்பங்களுக்கு வேறுபட்ட சில பொருட்கள் அடங்கிய ஒரு பொதியை வழங்க இருக்கின்றோம் .

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏறக்குறைய 
5000 ரூபாயும்
முழுவதும் சேதமடைந்த குடும்பங்களுக்கு மேலும் 3000 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கவுள்ளோம்.
 
 ( வி.ரி.சகாதேவராஜா)