மட்டக்களப்பு மாவட்டஅரச அலுவலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் 2ம் கட்ட நிவாரணப்பணி

 


 

அரச அலுவலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் 2ம் கட்ட நிவாரணப்பணி ஞாயிறன்று சென்றடையும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மழை, வெள்ளம், மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் ஞாயிற்றுக் கிழமை கொண்டு செல்லதற்கான ஏற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. மாவட்ட செயலகத்தின் மேற்கொண்டுள்ள நிவாரணப்பணியின் இரண்டாம் கட்டமே மலையக மக்களுக்கான நிவாரணப் பணியாக இடம்பெறவுள்ளது.

இதற்கான நிவாரணப் பொருட்களை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் செயற்படும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இம்மக்களுக்குத் தேவையான தண்ணீர் போத்தல்கள், உலர் உணவு வகைகளான அரிசி, கோதுமை மா, நூடில்ஸ், பிஸ்கட், டின்மீன்கள், பால்மா உட்பட சிறுவர்களுக்கான உணவு வகைகள், பம்பஸ் மற்றும் பெண்களுக்கான சுகாதார சுத்திகரிப்புப் பொருட்கள், உடைகள் போன்றவற்றுடன் கற்றல் உபகரணங்கள், பாடக்குறிப்புகள் போன்றவை சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இவ்விடயத்தில் பங்களிப்பு செய்யவிரும்பும் பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது நிவாரணப் பொருட்களை தத்தமது பிரதேச செயலகங்களில் கையளிக்க முடியும் அல்லது நேரடியாக மாவட்ட செயலகத்தில் கையளிக்க முடியும் என அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

மேலும் இந்நிவாரணப் பொருட்களை எதிர்வரும் 07.12.2025 ஞாயிற்றுக் கிழமை மலையகத்திற்கு கொண்டு செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க முன்வரும் வர்த்தகர்கள் தங்களது வாகனம் தொடர்பான தகவல்களை மாவட்ட செயலகத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் இந்நிவாரணப் பணியில் தங்களது பங்களிப்பினை வழங்கவிருப்பவர்கள் மேலதிக தேவைக்கான பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அருள்ராஜ் : 075 988 8787
ஜனா: 077 375 4538
துவாரகன் : 077 777 2894
கமால்தீன் : 077 138 9 138