மாணவியின் கைகளில் பிரம்பால் 160 தடவைகள் அடித்து காயப்படுத்திய தனியார் வகுப்பு ஆசிரியருக்கு பிணை.

 

 


கணிதப் பாடப் பரீட்சையில் புள்ளிகள் குறைந்ததாகக் கூறி, மாணவி ஒருவரின் கைகளில் பிரம்பால் 160 தடவைகள் அடித்து காயப்படுத்திய தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு பிணையில் செல்ல காலி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

காலி நகரில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில், தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவிக்கு ஆசிரியர் கணித வினாத்தாள் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில் அந்த மாணவி எதிர்பார்த்ததை விட 32 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளார்.

அந்த மாணவியின் இரு கைகளிலும் ஆசிரியர் 160 முறை பிரம்பால் அடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பலத்த காயமடைந்த மாணவி, தற்போது காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான தனியார் வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், காலி தலைமையக காவல்நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் உறவினர்கள் தன்னைத் தாக்கியதாகக் கூறி, குறித்த ஆசிரியரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த காலி மேலதிக நீதவான் மஹேஷிகா விஜேதுங்க , தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நேற்று (19) அனுமதித்தார்.