தேவ சுகிர்தராஜ்
BA (Hons) in Tamil and Tamil teaching (R)
மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்களின் பீடம் மொழிக்கற்கைகள் துறை தமிழ் மற்றும் தமிழ்மொழி கற்பித்தலில் சிறப்புக்கலைமாணி
திறந்த பல்கலைக்கழகம் மட்டக்களப்பு பிராந்திய நிலையம்
#சுவடி
ஓலைகளில் எழுத்துச் சுவடுப் பதியுமாறு ஆணிகளைக் கொண்டு எழுதப்பெற்ற ஏடுகளின் தொகுப்பு சுவடியாகின்றது. தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்னும் பெயர்கள் புறத்துக் காழுடைய பனை, தெங்கு (தென்னை), கமுகு (பாக்கு) முதலியவற்றின் இலைகளைக் குறிக்கும் மரபுச் சொற்களாகும். இவற்றில் மடல், ஓலை என்ற பெயர்கள் கடிதவடிவில் எழுதப் பட்டவைகளையும், தனித்தனி ஏடாக எழுதப்பட்டவை ஏடு என்றும், ஏடுகளின் தொகுப்பு சுவடி என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கருத்தை வெளிப்படுத்தும் வகையில், ‘சுவடி’ என்னும் பெயர் காரணப்பெயராம். சுவடு உடையது சுவடியாகும். எழுதப்படுதலின் எழுத்து என்றார். அதுபோல எழுத்துச்சுவடு உடையது சுவடி எனப்பெற்றது. பொதுநிலையில் எழுத்துகள் பதியுமாறு எழுதப்பெற்ற ஏடுகளின் தொகுப்பே ‘சுவடி’ என அழைக்கப்பெற்றது.
தமிழன் தன் கருத்துச் சுவட்டைப் பதித்த பொருளை முதலில் ‘சுவடி’ என்றே அழைத்திருக்கவேண்டும்.
“பாட்டுப்புறம் எழுதிய கட்டமைச் சுவடி’’
என்பது பெருங்கதை (3 : 1 : 199-20)
“சுவடி என்பது இணை, கற்றை, கட்டு, பொத்தகம் என்னும் பெயர்களையும் பெறுகிறது. பொருத்தி அழகு படுத்தலைச் ‘சுவடித்தல்’ என்பர். சுவடி-சோடி, சோடனை – அழகுபடுத்துதல் ஆம்.’’ (சுவடிப் பதிப்பியல்)
எழுதப்பெற்ற ஓலைகளின் சுவடிப்பே ‘ஓலைச்சுவடி’ ஆனது. தமிழில் ‘தோடு’, ‘மடல்’, ‘ஓலை’, ‘ஏடு’, ‘இதழ்’ ஆகிய சினைப்பெயர்கள் ஆகுபெயர்களாய் எழுதப்பெற்ற சுவடிகளைக் குறிக்கின்றன. இவற்றுள் பெரும்பாலும் கடித வடிவில் எழுதப்பெற்றவை தோடு, மடல், ஓலை என்ற பெயர்களைப் பெறுகின்றன. நூல் வடிவில் அமைந்தவை ‘ஏடு’ என அழைக்கப்பெறுகின்றன. எழுத்துச்சுவடிகளைத் தாங்கியுள்ள அவ்வேடு களின் தொகுதி ‘சுவடி’ எனப்பெற்றது. “கையால் எழுதப்பெற்ற படிவம் ‘சுவடி’ எனப்படும். எந்தப் பொருளிலும் எழுதப்பட்டதாக இருக்கலாம். எளிதாகவும் விரைவாகவும் எழுதக்கூடிய எழுது கருவிகளால் எழுதப் பெற்றதே சுவடியாகும். கல்லில் வெட்டுவது போன்ற கருவிகளைக் கொண்டு செதுக்கப்பெறும் கல்வெட்டுப் படிவங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடியதே சுவடியாகும். மிகப் பழங்காலத்தில் அல்லது இடைக் காலத்தில் எழுதப்பெற்ற எழுத்துப் படிவங்களைக் குறிப்பதற்கே சுவடி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது’’ (சுவடியியல், பக்.8-9) என்று ஆங்கிலப் பேரகராதி கூறுவதைப் பூ. சுப்பிரமணியம் குறிப்பிடுகின்றார்.
‘சுவடி’ என்ற சொல்லானது நூல் என்ற பொருளில் வழங்கி வருகிறது என்பதை,
“நூல் என்ற பெயர் பொருட்சிறப்போடு உவமைக்குப் பெயராகவும், காரணக் குறியாகவும் பெருவழக்கில் இருந்து வருகிறது என்பது வெளிப்படை. இவற்றைப் போலவே ‘சுவடி’ என்னும் சொல் நூலைக்குறித்து நிற்கும் காரணப் பெயராகி வழக்காற்றிலும் இருந்து வருகிறது என்பது தெளிவாகிறது’’ (சுவடியியல், ப.15) என்று பூ. சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு ‘ஓலைச்சுவடி’ என்று அழைக்கப்பட்டு நாளடைவில் ‘ஓலை’ என்றும், ‘சுவடி’ என்றும் இரண்டு பெயர்களைப் பெற்று விளங்குகிறது. பெயர்கள் வேறு வேறாக இருப்பினும் இப்பெயர்கள் குறிப்பிடும் பொருள் ஒன்றேயாகும். பழங்காலம் முதல் கல்வியாளர்கள் ‘ஓலை’ என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளனர். ஓலையில் எழுதப்பட்டிருக்கும் செய்திகளுக்குத் தக்கவும், வேறு காரணங்களினாலும் அதன் பெயர்கள் பல வகைகளாக இருந்தன என்பதை, “ஓலைகள் பட்டோலை, பொன்னோலை, மந்திரஓலை, வெள்ளோலை, படியோலை என்று இலக்கியங்களிலும், அறையோலை, கையோலை, சபையோலை, இறையோலை, கீழ்ஓலை, தூது ஓலை, ஓலை பிடிபாடு என்று கல்வெட்டுகளிலும் பலவகைகளாகச் சொல்லப்பட்டுள்ளன” (சுவடிச் சுடர், ப.456) என்று சு. இராசகோபால் குறிப்பிடுவதிலிருந்து அறியமுடிகிறது.
#சுவடி_தயாரித்தல்
பனை மரத்தில் உள்ள ஓலைகளில் அதிக முற்றலும், அதிக இளமையதும் இல்லாமல் நடுநிலையில் உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து (இவை நீண்ட நாட்கள் அழியாமல் இருக்கக் கூடியவை), அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து நரம்பு நீக்கித் தனக்குத் தேவையான அளவு நறுக்கி எடுப்பர். இதனை ‘ஓலைவாருதல்’ என்பர். ஒத்த அளவாக உள்ள ஓலைகளை ஒன்று சேர்த்தலைச் ‘சுவடி சேர்த்தல்’ என்பர். பனை ஓலைகளின் மேற்பரப்பு கடினமானதாக இருப்பதால் பதப்படுத்தாமல் ஓலைகளில் எழுத முடியாது. அவற்றை எழுதுவதற்குத் தக்க மிருதுவாக்க வேண்டும். அப்போதுதான் எழுதுவதற்கு எளிதாகவும் சேதமுறாமலும் இருக்கும். பதப்படுத்துவதால் ஓலைகள் விரைவில் அழியாமலும், பூச்சிகளால் அரிக்கப்படாமலும் பாதுகாக்கப்படுகின்றன. அதனால் எழுதுவதற்காக வெட்டப்பட்ட ஓலைகளைப் பதப்படுத்த நிழலில் உலர்த்தல், பனியில் போட்டுப் பதப்படுத்தல், வெந்நீரில் போட்டு ஒரு சீராக வெதுப்பி எடுத்தல், சேற்றில் புதைத்தல் போன்ற பல முறைகளைக் கையாண்டுள்ளனர்.
சுவடிகள் எவ்வாறு தயாரித்துப் பதப்படுத்தப்பட்டன என்பதை, “சுவடிகள் தயாரிப்பதற்கு முதலில் பனையோலைகளைத் தேவையான அளவில் கத்தரித்துக் கொள்வர். இவ்வாறு அளவு செய்து கொள்ளப்பட்ட ஏடுகள் மிக நன்றாக உலர்த்தப்படும். சற்றும் ஈரமின்றி நன்றாகக் காய்ந்த பிறகு இவ்வோலைகள் தண்ணீரில் இட்டு வேகவைக்கப்படும். இவ்வாறு இவை கொதிக்க வைக்கப்படுவதால் ஏடுகளில் ஒரு துவள்வு ஏற்படுகிறது. பிறகு ஓலைகள் மறுபடியும் நன்கு காயவைக்கப்படும், காய்ந்த பிறகு கனமான சங்கு அல்லது மழுமழுப்பான கல்கொண்டு ஓலைகளை நன்றாகத் தேய்ப்பார்கள். இப்படிச் செய்வதால் ஏட்டிற்கு ஒரு பளபளப்பு ஏற்படும். மேலும் நேராகத் தகடுபோல ஆகிவிடும். இப்போது ஏடு எழுதுவதற்கு ஏற்ற நிலையை அடைந்து விட்டது. இம்முறைக்கு ஏட்டைப்பாடம் செய்தல் அல்லது பதப்படுத்துதல் என்று பெயர்’’ (சுவடிப் பதிப்புத் திறன்,2, ப.172) என்று தி. வே. கோபாலய்யரும்,
“ஓலையைப் பதப்படுத்த பலமுறைகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுள் சில முறைகள்,
அ. ஓலைகளைத் தண்ணீர் அல்லது பாலில் வேகவைத்தல்,
ஆ. நீராவியில் வேகவைத்தல்,
இ. ஈரமணலில் புதைத்து வைத்தல்
ஈ. நல்லெண்ணெய் பூசி ஊறவைத்தல்
உ. ஈரமான வைக்கோற் போரில் வைத்திருத்தல்
சில முறைகளில் ஓலைகளின் மேல்பரப்பு மிருதுவானதுடன் அதில் உள்ள லிக்னின் என்ற பொருள் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஓலைகள் விரைவில் சிதலமடைவதில்லை. ஒரிசாவில் பாதுகாப்பிற்காக மஞ்சள்நீர் அல்லது அரிசிக்கஞ்சியில் அரைமணி நேரம் ஊறவைத்துப் பதப்படுத்தினர்’’ (சுவடிச்சுடர், ப.429) என்று ப. பெருமாளும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பதப்படுத்திய சுவடிகளில் ஒன்று அல்லது இரண்டு துளைகளிடுவர். இதனை ‘ஓலைக்கண்’ என்பர். ஒரு துளையில் கயிற்றை நுழைப்பர். கயிறு உருவாமலிருக்க ஈர்க்குடன் உள்ள ஓலையில் இரண்டு முக்கோணங்கள் உள்ளதாக கிளிமூக்குப் போலக் கத்தரித்துக் கட்டியிருப்பர். இதற்கு ‘கிளிமூக்கு’ என்று பெயர். மற்றொரு துளையில் ஒரு குச்சி அல்லது ஆணியைச் செருகியிருப்பர். இதற்குச் ‘சுள்ளாணி’ என்று பெயர். சுவடிகளுக்கு மேலும் கீழும் மரத்தாலான சட்டங்களை வைத்துக் கிளிமூக்குக் கட்டப்பட்ட கயிற்றினால் சுவடியை இறுக்கிக் கட்டி வைப்பர். இவ்வாறு சுவடி தயாரித்துப் பதப்படுத்தப்படுகிறது.
வைத்திருந்தனர்.
#மடக்கெழுத்தாணி
மடக்கெழுத்தாணி என்பது வாரெழுத்தாணியைப் போன்று ஒரு முனையில் எழுத்தாணியும், மறுமுனையில் கத்தியும் அமைந்திருக்கும். ஆனால் இரண்டு பகுதிகளையும் மடக்கி இடையில் உள்ள கைப்பிடியில் அடக்கிக் கொள்ளுமாறு அமைந்திருக்கும். மடக்கிவைக்கும் தன்மை கொண்டதால் இது மடக்கெழுத்தாணி என்று அழைக்கப்படுகிறது. இதன் கைப்பிடி மரம், மாட்டுக்கொம்பு, தந்தம், இரும்பு, பித்தளை போன்றவற்றால் செய்யப்பட்டிருக்கும். இவ்வெழுத்தாணியைப் பயன்படுத்தாதபோது மடக்கிவைப்பதால் பாதுகாப்புடையதாக இருந்தது.
#சுவடியில் எழுதும் முறை
பழங்காலத்தில் தற்காலத்தில் உள்ளதுபோன்று கல்விக் கூடங்களில் கல்வி கற்பிக்கப்படவில்லை. மாணவர்கள் ஆசிரியரைத் தேடிச் சென்று கல்வி கற்கும் முறை இருந்தது. அக்காலத்தில் காகிதமும் எழுதுகோலும் வழக்கிற்கு வரவில்லை. ஓலைகளில் எழுத்தாணியால் எழுதித் தொகுத்த சுவடிகளே நூல்களாக இருந்தன. அப்போதைய மாணவர்களுக்கு மணல் கரும்பலகை (சிலேட்) யாகவும், பனைஓலை புத்தகமாகவும், விரலும் எழுத்தாணியும் எழுதுகோலாகவும் (பேனா) இருந்தன.
ஆசிரியர் முதலில் மாணவரின் வலக்கை ஆள்காட்டி விரலைப் பிடித்து தட்டில் பரப்பி வைத்துள்ள அரிசி (அ) சர்கரை (அ) தானியங்களில் எழுத்தை எழுதிக்காட்டுவார். பின்னர் மணலில் எழுத்தின் வரிவடிவை எழுதிக்காட்டுவார். பிறகு அவர் சொல்லிய தமிழ் எழுத்துக்களைத் தவறின்றிச் சரியாக உச்சரிக்கவேண்டும். தமிழின் ஒலி வடிவை நன்றாகச் சொல்லத் தெரிந்த பின்புதான் ஆசிரியர் எழுத்தின் வரிவடிவை ஓலையில் வரைந்து காட்டுவார். வரிவடிவை மாணவர் நன்றாக எழுத அறிந்து கொண்டதன் பின் ஓலை வாரவும், சுவடி சேர்க்கவும், நன்றாக எழுதவும் முற்படுவர்.
பனை ஓலைகளில் எவ்வாறு எழுதப்பட்டது என்பதை, “இளமை முதலே ஓலையை இடக்கையில் பிடித்து, வலக்கையால் எழுத்தாணியைக் கொண்டு எழுதிப் பழகுவர். எழுத்தாணியைப் பிடித்து எழுதும்போது ஓலையைத் தான் நகர்த்துவர். எழுத்தாணி பிடித்த இடத்திலிருந்தே வரையும், தற்போது தட்டச்சு முறையிலும் தாள்மீது அச்செழுத்துப் படிந்து, தாள்தான் நகர்ந்து போகிறது. அச்செழுத்து மையத்தில் மட்டும் அழுந்துகிறது. வேறு இடங்களுக்கு அது அசைவதில்லை என்ற நுட்பம் இச் சந்தர்ப்பத்தில் அறிந்து ஒப்புநோக்கத் தக்கதாகும். ஏடு எழுதப்பழகிக் கொண்டோர் தமது இடக்கைப் பெருவிரல் நகத்தை வளர்த்து, அதில் பிறைவடிவில் துளையிட்டு, அப்பள்ளப் பகுதியில் எழுத்தாணியை வைத்து, ஓலையில் வரிவரியாக எழுத்தின் மீது மற்றோர் எழுத்துப் படாமலும் ஒரு வரியின் மீது மற்றோர் வரி இணையாமலும் போதிய இடம்விட்டு எழுதுவர். ஒருபக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துகளாக இருபது, முப்பது வரிவரையில் எழுதுவதற்குரிய மெல்லிய எழுத்தாணியையும் பயன்படுத்துவதுண்டு. இக்காலத்தில் தாளில் எழுதுவதைப் போன்ற வேகத்துடன் முற்காலத்தில் ஏட்டில் எழுதுவதும் உண்டு. இப்படி வேகமாய் எழுதுபவர்க்கு ‘எழுத்தாளர்’ என்று பெயர்’’ (அச்சும் பதிப்பும், பக்.95-96) என்று மா.சு. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஓலைகளில் எழுதப்பட்ட எழுத்துகள் சரியாகத் தெரிவதற்காக ஓலையின் மீது மஞ்சள் அரைத்துப் பூசுதல், வசம்பு, மணித்தக்காளி இலைச்சாறு, கோவை இலைச் சாறு, ஊமத்தை இலைச்சாறு, மாவிலைக்கரி, அருகம்புல்கரி, விளக்குக்கரி போன்றவற்றைப் பூசி எழுத்துகளை வாசித்துள்ளனர். இதற்கு ‘மையாடல்’ என்று பெயர்.
இம் மையாடலைப் பற்றி,
‘‘மஞ்சற் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்’’ (கண்ணி – 25)
என்று ‘தமிழ் விடுதூது’ என்ற நூல் குறிப்பிட்டுள்ளது. இம் மையாடலினால் ஓலையில் உள்ள எழுத்து தெளிவாகத் தெரிவதோடு கண்ணிற்குக் குளிர்ச்சியை உண்டாக்கி, ஓலைகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கிறது.
மேற்கண்டவற்றின் மூலம் சுவடிகளில் எழுதப் பயிற்சியெடுத்தல், சுவடிகளில் எழுதுதல், அவற்றிற்கு மையிடுதல் போன்றவை மூலம் சுவடிகளில் எழுதி வாசித்து வந்தனர் என்பதை அறியமுடிகிறது.
ஒரு இடத்தில் பார்த்தசுவடி, படித்த சுவடி சில நாட்கள் கழித்து அங்குச் சென்று பார்க்கும்போது அச்சுவடி அங்கு இருப்பதில்லை. அது எங்கு, எப்படி காணாமற் போனது, என்ன ஆனது என்பது பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் பல சுவடிகள் அழிந்தன என்பதற்கு, “உ.வே.சா. அவர்கள் படித்த காலத்தில் திருவாவடுதுறை மடத்துப் புத்த சாலையில் ‘வளையாபதி’ என்னும் சுவடியைப் பார்த்திருக்கிறார். ஆனால் அவர் சுவடிப்பதிப்பில் ஈடுபட்ட போது அச்சுவடி கிடைக்கவில்லை. சி.வை.தாமோதரம் பிள்ளையவர்களுக்குச் சிறுவயதில் அவருடைய தந்தையார் சில நூல்களைக் கற்பித்தார். அவற்றைப் பிள்ளையவர்கள் பதிப்பிக்க எண்ணியபோது தமிழ் நாடெங்கும் தேடியும் அச்சுவடிகள் அவருக்குக் கிடைக்கவில்லை’’ (சுவடியியல், ப.60) என்ற வரிகளே சான்றாக அமைந்துள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனச் சுவடிக் காப்பகத்தில் 1550 குறள்களைக்கொண்ட திருக்குறள் சுவடி இருப்பதாக அந்நிறுவனச் சுவடி விளக்க அட்டவணை குறிப்பிடுகிறது. ஆனால் தற்போது அச்சுவடி அங்கு இல்லை. அச்சுவடி எப்படி, யாரால் காணாமற்போனது என்று அறிய முடியவில்லை.
#அந்நியர்களால் ஏற்பட்ட அழிவு
வெளிநாட்டினர் ஆய்விற்காகவும், வேறுசிலகாரணங்களுக்காகவும் நம் நாட்டிற்கு வந்து செல்லும்போது இங்குள்ள செல்வங்களைக் கொண்டு சென்றதுடன் பல ஓலைச் சுவடிகளையும் தம்மோடு கொண்டு சென்றனர். அச் சுவடிகளைப் பணத்திற்காக நம் நாட்டவர்களே அவர்களிடம் விற்றுள்ளனர் என்பதை, “ஆராய்ச்சி செய்யும் மேலைநாட்டு அறிஞர்கள் இந்தியாவுக்கு வந்து களனாய்வுப் பணி செய்வது பெருவழக்காகி வருகிறது… சாதனப் பொருள்களைத் தேடுவதே இவர் களுடைய தலையாய நோக்கமாகும் … நகல்களுக்குப் பதிலாக அசல் நூல்களையே பெறமுயலுகின்றனர்… மேலும் இந்த முயற்சியில் அவர்களுடைய எண்ணம் ஈடேற நம் நாட்டுச் சூழ்நிலையும் ஓரளவு வாய்ப்பளித்து விடுகிறது. அவர்கள் தேவையறிந்து ஒத்துழைப்பதற்கென்றே ஆங்காங்கு வியாபாரிகளும் தரகர்களும் காத்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பொருளே குறிக்கோளாதலின்… அரிய பதிப்புகளையும் சுவடிகளையும் சேகரித்து அவர்களிடம் இரகசியமாக விற்று விடுகின்றனர்’’ (சுவடியியல், பக்.60-61) என்பர் அ. தாமோதரன் அவர்கள். தமிழரின் அறியாமை மட்டுமின்றி ஏழ்மை காரணமாகவும் சுவடிகள் அந்நியர்களுக்கு விற்கப்பட்டுள்ளன என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது.
மேலும், “இந்தியா வந்த வெளிநாட்டு யாத்திரிகர்கள் பலர் பல நூல்களைத் தங்கள் நாட்டிற்குக் கடத்திச் சென்றுள்ளனர். கி.பி.629-645இல் இந்தியா வந்த யுவான்சுவாங் மட்டும் 520 பெட்டிகளில் 657 வகையான நூல்களை எடுத்துச் சென்றதாகக் குறிப்புகள் கூறுகின்றன. கி.பி.964-976இல் சீனாவிலிருந்து இந்தியா வந்த 300 துறவிகள் ஏராளமான சமயச் சுவடிகளைக் கொடையாகப் பெற்றுச் சென்றதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. சென்ற நூல்கள் அனைத்தும் பாதுகாக்கப் பெற்றனவா என்றும் அறியக் கூடவில்லை’’ (சுவடிப் பதிப்பியல், பக்.275-276) என்ற குறிப்பிலிருந்து வெளிநாட்டவர்கள் இங்கிருந்து கொண்டு சென்ற நூல்கள் என்னவாயிற்று என்பதை அறியமுடியவில்லை. இவ்வாறு அந்நியர்களால் பல நூல்கள் அழிந்துள்ளன என்பது தெரியவருகிறது.
சிலர் தம் இல்லங்களில் சுவடிகளை நிரப்பி சுவடி நூலகங்களாக மாற்றிப் பாதுகாத்தனர். அரசு நூலகங்களும், நிறுவனங்களும் செய்த பணியைத் தனி மனிதராக இருந்து செய்தவர்கள் பலர். அவர்களுள் பதிப்பாசிரியர்களால் குறிப்பிடப்படும் சிலரின் பெயர்ப்பட்டியலை இங்குக் காண்போம்.
திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர், கவிராச நெல்லையப்பப் பிள்ளை, கவிராச ஈசுவரமூர்த்தி பிள்ளை, திருவம்பலத் தின்னமுதம் பிள்ளை, திருப்பாற்கடனாதன் கவிராயர், மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர், திருமயிலை சண்முகம்பிள்ளை, மயிலாப்பூர் திரு அண்ணாசாமி உபாத்தியாயர், ஆழ்வார் திருநகரி திரு தே. இலட்சுமணகவிராயர், திரு தேவர் பிரான்கவிராயர், திரு பெரிய திருவடிக்கவிராயர், திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, அட்டாவதானம் திரு சபாபதி முதலியார், திரு கா.ரா. நமச்சிவாய முதலியார், திரு மழவை மகாலிங்கையர், திரு முத்துக்குமாரசாமி முதலியார், வ.உ. சிதம்பரம்பிள்ளை, திரு தொழுவூர் வேலாயுத முதலியார், யாழ்ப்பாணம் திரு ம.வி. கனகசபைப் பிள்ளை, திரு குமாரசாமி செட்டியார், திரு நல்லூர் கைலாசம் பிள்ளை, திரு சுவாமிநாத பண்டிதர், திரிசிரபுரம் திரு அண்ணாசாமிப்பிள்ளை, திரு தியாகராச செட்டியார், சேலம் திரு இராமசாமி முதலியார், திருத்தணிகை சரவணப்பெருமாளையர், தேரழூந்தூர் சக்கரவர்த்தி இராசகோபாலச்சாரியார், களக்காடு திரு சாமிநாத தேசிகர் போன்ற சுவடி வள்ளல்கள் பலர் சுவடிகளைத் தொகுத்து, பாதுகாத்துப் பதிப்பாசிரியர்களுக்கு வழங்கி உதவியுள்ளனர். இவர்களின் இப்பணி போற்றுதற்கும் வணங்குதற்கும் உரியதாகும்.






