அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இராமர் கோயிலின் கொடியேற்று விழா இன்று (25) பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
அயோத்தியில் பிரம்மாண்ட இராமர் கோயில் கட்டும் பணி கடந்த 2020 ஓகஸ்டில் தொடங்கியது. இக்கோயில் கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இதன் பிறகு அயோத்தி, மற்றொரு பிரம்மாண்ட விழாவுக்கு தயாரானது. இராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று பிரதான கோயில் கோபுரத்தில் கொடியேற்றும் விழா நடைபெறற்றது. பிரதமர் நரேந்திர மோடி இவ்விழாவில் பங்கேற்று, கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் காவிக் கொடி ஏற்றி வைத்தார். இதற்காக இராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவுக்கு அயோத்தியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சாலை அனைத்தும் தூய்மை செய்யப்பட்டு, நகரம் காவிக் கொடிகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. இரவில் நகரம் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.
பிரதான பால இராமர் கோயிலு டன் மகாதேவ், விநாயகர், அனுமன், சூரியதேவ் உள்ளிட்ட துணை கோயில்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விழா சடங்குகளை பிரபல காசி பண்டிதர் கணேஷ்வர் சாஸ்திரி வழிகாட்டுதலின் கீழ் அயோத்தி, காசி மற்றும் தென்னிந்தியாவை சேர்ந்த 108 ஆச்சாரியர்கள் மேற்கொண்டனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமையும் குறிறப்பிடத்தக்கது.







