நாவிதன்வெளியில் ஆதம்பாவா எம்.பி - தவிசாளர் ரூபசாந்தன் இடையே முறுகல்! மலர் மாலையை கழட்டி வீசிவிட்டு வெளியேறிய ஆதம்பாவா எம்.பி !

 







 
 
 
 
 
 


அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியில் வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவுக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ. ரூபசாந்தனுக்குமிடையே முறுகல் நிலை இடம்பெற்றது.

முறுகலின் உச்சத்தில் மலர் மாலையை கழட்டி வீசிய ஆதம்பாவா பிரதேச செயலாளரை  மாலை போட வேண்டாம் என்று கூறி காரில் ஏறிச் சென்றார்.
ஒருசில நிமிடங்களில் திரும்பிவந்து பெயர்ப் பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற நேரடி சந்திப்பில் கடந்த முப்பது வருடங்களாக போக்குவரத்துக்கு சிரமமாக உள்ள பழைய உஹன வீதியை செப்பனிட்டுவதற்கான திட்ட வரைவுகள் கையளிக்கப்பட்டது.

இதன் பலனாக அந்த வீதியின் அபிவிருத்தி பணிகள்  நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்டத்திற்கான 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பழைய உஹன வீதிக்கு 10369413.50 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அபிவிருத்தி திட்டத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கு மாறுபட்ட வகையில், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கருத்து வெளியிட்டதால் முரண்பாட்டு நிலை உருவானது. 

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா இந்த அபிவிருத்தியை யாரும் உரிமை கொண்டாட முடியாது. இது எங்களின் அரசாங்கத்தின் அபிவிருத்தி, இதனை முகப்புத்தகங்களில் தாங்கள் போட்டதாக யாரும் உரிமைகோரினால் இந்த பக்கம் எந்த வீதியும் வராது என்று எச்சரிக்கை விடுத்தார்.

 இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் மக்கள் வரிப்பணத்தில் மூலம் ஏற்படும் அபிவிருத்தியை மக்கள் உரிமை கொண்டாட முடியும் என பதில் கூறினார். மேலும் இந்த விடயம் தொடர்பில் தான் ஜனாதிபதிக்கு முறையிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெவித்தார். 

பிரதேச சபைக்கு சொந்தமான எங்களின் வீதியை நாங்கள் திறக்கிறோம் என தவிசாளர் தெரிவித்தார். இது அரசாங்கத்தின் பணம் என பாராளுமன்ற உறுப்பினரும், மக்களின் வரிப்பணம் என தவிசாளரும் வாதிட்டனர்.

 இதனையடுத்து ஏற்பட்ட முரண்பாட்டால் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா தான் அணிந்து இருந்த பூ மாலையை கழற்றி வீசிவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றார்.

அங்கிருந்தவர்கள் மேட்கொண்ட சமாதான நடவடிக்கையின் பின்னர் பிரதேச செயலாளருடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் பதாதையை திரைநீக்கம் செய்து வைத்தார். 

நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பழைய உஹன வீதி முதற்கட்ட அபிவிருத்தி பணிக்காக 475 மீட்டர் தார் வீதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ராகுலநாயகி சஜீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த முரண்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  

மீண்டும் வருகை தந்து திரை நீக்கம் செய்த பின்னர் எந்த ஒரு நிகழ்விற்கும் யாருக்கும் மாலை மரியாதை செய்ய கூடாது என நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ராகுலநாயகி சஜீந்திரன் அவர்களிடம் கடும் தொனியில் பாராளுமன்ற உறுப்பினர் கூறியமை மக்களை முகம் கூச செய்தது .நிழ்வுகளுக்கு யாருக்கும் மாலை அணிவிக்க கூடாது எனில் ஏன் மாலை போட கழுத்து நீட்டினார் என மக்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.
 
( வி.ரி.சகாதேவராஜா)