அன்பும் கருணையும் நிறைந்த ஒரு சமூதாயத்தை உருவாக்குவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அதற்கு நாம் மனிதாபிமான செயல்களையும், மனித உரிமைகளையும் மதிக்க வேண்டியது அவசியமானதாகும்.
இவ்வாறு மனிதாபிமான மனித உரியைகள் அமைப்பின் கொழும்பு தலைமையகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மனிதநேய செயற்பாட்டாளருமான திரு. சமரசிறி தெரிவித்தார்.
கொழும்பு MIU பல்கலைக்கழகம், மற்றும் மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் என்பன இணைந்து மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் குழாமினரை சந்திப்பதற்கான விசேட. ஏற்பாடு ஒன்றை கல்லடி வேலூரில் அமைந்துள்ள மேற்படி கல்வி நிலையத்தில் ஒழுங்கு செய்திருந்தது.
மேற்படி கல்வி நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் இடம் பெற்ற இச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாம் ஒவ்வொருவரும் மதிப்புடன் வாழும் உரிமையைக் கொண்டவர்கள் ஆகவே நாம் இனம், மதம், பால், மொழி, தரம் என்ற வேறுபாடின்றி அனைவரும் சமமாகவே பார்க்கப்பட வேண்டும். இது தான் மனித உரிமையின் அடிப்படை நோக்கமாகும்.
மனிதாபிமானம் என்பது பிறருக்காக நமக்குள்ளிருக்கும் உணர்வுப்பூர்வமான செயலை ஏழை எளியவர்களுக்கு வெளிகாட்டி உதவுவது, ஆகும்.
அத்துடன் துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு துணை நிற்பது, உரிய நேரத்தில் உரிய ஆதரவு வழங்குவது போன்ற மனிதாபிமான செயல்களை நாம் செய்பவர்களா இருக்க வேண்டும்.
மனித உரிமைகளை காக்கும் சேவைகள், மனிதாபிமானத்தின் மூலக்கற்களாக இருக்கின்றன. இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்
இந்த உளநல அமைப்பானது எதிர்காலத்தில் மன நலம் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டினை திறம்பட செய்ய வேண்டும். அந்த வகையில் இன்றைய சந்திப்பானது எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆகவே நாம் ஒன்றுபட்டு மனிதநேய செயலை நேர்த்தியாக செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
இந்த விசேட சந்திப்பின் போது மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய சமரசிறி தலைமையில் வருகைதந்த மனித உரிமைகள் அமைப்பின் பிரதம செயலாளர் மதிப்பிற்குரிய.ஷாமலி இரோஷனி மாலா, மதகுரு AM.சுரேஷ், மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் கிழக்குமாகாண பணிப்பாளர் NM.ஜோசப் ஆகியோர், மனித உரிமை செயற்பாட்டில் அங்கம் வகிக்கும் கல்வி நிலையத்தின் உளசமூக உறுப்பினர்களால் மனிதாபிமான மனித உரிமைகள் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி உளவியல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






































