அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை மற்றும் விஷேட பொதுமக்கள் சேவைத் திட்டங்களை செயற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் நவம்பர் 28,29 ஆந் திகதிகளில் மட்/ககு/கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
நோக்கமும் இலக்குகளும்,
அரச சேவைகளுக்கு பொதுமக்கள் எளிதில் அணுகும் வசதிகளை ஏற்படுத்துதல்,
சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்த்தல், மக்கள் நட்பு, திறம்பட்ட நிர்வாக
அமைப்பை வலுப்படுத்தல் ஆகிய முக்கிய நோக்கங்களை இலக்காகக் கொண்டு
இந்நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக நாடு முழுவதும் 250 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடமாடும்
சேவைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் கண்டறியப்பட்ட சேவைகளை
அடிப்படையாகக் கொண்டு, நீண்ட காலமாக தீர்வு காணப்படாத பொதுமக்கள்
பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கும் வகையில், இந்த திட்டம்
விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தினூடாக பொதுமக்களுக்கு
விரைவான சேவை வழங்கும் அமைப்பை உருவாக்குதல், சமூக மட்டப்பிரச்சினைகளுக்கு
தீர்வு காணுதல், சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் தரமான நிர்வாகத்தை
சமப்படுத்துதல் எனும் நோக்கங்களை அடைவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சித் திட்டமானது.
• நடமாடும் சேவை
• நடமாடும் வைத்தியமுகாம்
• சுற்றுப்புறச்சுழல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம்
• கலைகலாச்சாரத்தினுடாக சமூக விழிப்புணர்ச்சி
யார் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்:
இந்நடமாடும் சேவையினூடாக கோரளைப்பற்று கிரான் பிரதேச செயலப் பிரிவு
பொதுமக்கள் உட்பட அதனை அண்டிய பிரதேசங்களான கோரளைப்பற்று – வாழைச்சேனை,
கோரளைப்பற்று மத்தி – வாழைச்சேனை, கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மற்றும்
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள்
இதற்குத் தேவையான ஆவணங்களை தத்தமது கிராம சேவை அலுவலர்கள் மூலம் செவ்வை
பார்த்து அத்தாட்சிப்படுத்திக் கொண்டு நடமாடும் சேவைக்கு வருவது
பொதுமக்களுக்கு விரைவான சேவையினைப் பெற்றுக் கொள்ள வசதியாக அமையும்.
வழங்கப்படும் சேவைகளும் பொதுமக்கள் சேவைத் திட்டங்களும்
கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள இந்நடமாடும்
சேவையினூடாக பிறப்பு, இறப்பு, விவாகம் மற்றும் விவாகரத்து பதிவுகள்
தொடர்பான சேவைகள், காணி தொடர்பான சேவைகள், தேசிய அடையாள அட்டை தொடர்பான
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர்
கொடுப்பனவு, அஸ்வெசும, நோய்க் கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி நன்மைகள்
தொடர்பான சேவைகள், சமுர்த்தி வங்கி தொடர்பான சேவைகள், கலாசாரப் பிரிவினால்
வழங்கப்படும் சேவைகள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள், ஓய்வூதியம்
தொடர்பான சேவைகள் என்பன வழங்கப்படவுள்ளதுடன் விழிப்புணர்வு நிகழ்வுகளும்
இடம்பெறவுள்ளன.
மேலும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகள், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகள், கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், கைத்தொழில் திணைக்களம் தொடர்பான சேவைகள், கடன் வழங்குதல் தொடர்பான சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், விவசாயத் திணைக்களம் தொடர்பான சேவைகள், மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தொடர்பான சேவைகள், சுகாதார வைத்திய காரியாலயத்துடன் தொடர்புடைய சேவைகள், பாரம்பரிய வைத்திய சேவைகள் போன்றனவும் வழங்கப்படவுள்ளன.
இதுதவிர இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான மருத்துவ முகாம், கலாசார நிகழ்வுகள், மரநடுகை, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கான விழிப்புணர்வுகளும் அன்றைய தினங்களில் காலை 9.00 மணிமுதல் வழங்கப்படவுள்ளன. இவ்வரிய சந்தர்ப்பத்தினை பொதுமக்கள் உரியவகையில் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.





