சுற்றறிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் அச்சம் கொள்ள தேவையில்லை, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிப்பு!!

 

 


 
















சுற்றறிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகள் அச்சம் கொள்ள தேவையில்லை, தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுவரும் மக்களுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யுங்கள், அரசாங்கம் எனும் வகையில் அவற்றை நீங்கள் பார்த்துக்கொள்வோம் என மட்டக்களப்பில் இடம் பெற்ற அனர்த்த நிலமை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலில் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) திகதி இடம்பெற்ற மாவட்டத்தின் அனர்த்த நிலமைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலான அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அரசியல் பிரதிநிதிகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் உயரதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு தமது துறைசார் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்ததுடன், தம்மால் இயன்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதன் போது ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அனர்த்த நிலமையினை எவ்வாறு முன்னாயத்தத்துடன் எதிர்கொள்வது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் கருத்து தெரிவிக்கையில், 

வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு மீதமாக உள்ள நிதிகளையும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செலவு செய்யுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார், அதை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தி உடனடியாக செயற்படுமாறும், அரசாங்கத்தினால் போதியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது நிதி தொடர்பில் எவரும் அச்சங்கொள்ள தேவையில்லை  எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு எதிர்வரும் காலத்தில் ஏற்படவிருக்கும் அனர்த்தங்கள் தொடர்பாக அதிகாரிகள் முற்கூட்டியே அறிவுறுத்துவது முக்கியம் எனவும், சம்மாந்துரை மற்றும் வாழைச்சேனை போன்ற பகுதிகளில் இடம் பெற்ற உயர் இழப்புக்கள் தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை, இனிவரும் நாட்களில் இவ்வாறான அநாவசிய உயிர் இழப்புக்கள் இடம்பெற கூடாது என அமைச்சர் கேட்டுக்கொண்டதுடன், சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கில் யாரேனும் அனர்த்தத்தில் சிக்குவார்களாக இருந்தால் முப்படையினரே அதற்கு பொறுப்பேற்க வேண்டும், காரணம் அவ்வாறானவர்கள் இனங்கானப்படுமிடத்து அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் கடமை முப்படையினருக்கு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.