தமிழில் ஒளிப்படக்கலை - பாகம் 01

 

 


 

வணக்கம்,

 எனக்கு சிறிய வயதுமுதல் ஒளிப்படம் எடுப்பதிலும் ஒளிப்படம் பற்றி அறிவதிலும் மிக ஆர்வமாக இருந்தது. ஆனாலும் அதில் நிறையவே பிரச்சினைகளும் இருந்தன. ஒளிப்படக்கலை என்பது ஒரு செலவுமிக்க பெழுதுபோக்கு. அதனால் ஆர்வமிருந்தாலும் ஒரு கமரா வாங்குவது என்பது மிகச் சிரமமாகவே இருந்தது.

  ஒருவாறாக அப்பாவின்காசில் கமராவாங்கினாலும் அதுபற்றிய அறிவைப் பெற எங்கே போவது என்றெல்லாம் எனக்கு அப்போது தொரிந்திருக்கவில்லை. ஏன் இப்போதும் ஒளிப்படத்துறையைத் தொழிலாகச் செய்பவர்களுக்கும் அதுவே ஒரு பாரிய சவாலாக இருப்பதும் கண்கூடு.

 செலவுகள் அதிகம்தான். இருந்தாலும் பொருளாதாரத்தையும் தாண்டி. ஒளிப்படத்துறையை தனது பொழுதுபோக்காக கொண்டவர்களுக்கும் தொழிலாகக் கொண்டவர்களுக்கும் அது பற்றிய பூரணமான அறிவைப் பெற்றுக்கொள்வதென்பது தமிழில் ஒரு சவாலான விடயமே. அந்தக் குறையை அது ஓரளவு நிவர்த்திசெய்யும் என்பதுடன். ஒளிப்படத்துறையில் நான் பெற்ற அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

 வேலைப்பழு மிகுந்த சூழ்நிலையில் மிக நீண்ட நாட்களுக்குப்பின்னர் எழுதத் தொடங்கியிருக்கின்றேன். ஆதலால் இதனை ஒரு தொடராக எழுதுவதே சாத்தியமாகிறது. இதன் போது நீங்களும் என்னுடன் பயணிக்கலாம் உங்களுடன் சக பயணியாகவே நான் பயணிக்க விரும்புகிறேன். ஒளிப்படத்துறையில் ஆர்வமிருப்பவர்கள் தங்களுக்கு இதில் வருபவை புதிய விடயமாக இருந்தால் கற்றுக்கொள்ளுங்கள். இந்தத் துறையில் இருப்பவர்கள் இந்தத் தொடரை வாசிக்க நேர்ந்தால் உங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது பிறருக்கு நிச்சயம் பயனுடையதாக இருக்கும். இதில் வரும் விடயங்களில் சந்தேகங்களை பின்ணூட்டல் மூலமாகவோ https://www.battimedia.lk இணையத்தள வட்சப் இலக்கம் 0774444401 ஊடாகவோ தெரியப்படுத்துங்கள். அதற்கான பதிலை அல்லது விளக்கத்தை அடுத்த தொடரில் பேசுவோம். இதற்கு வாய்ப்பு வழங்கிய www.battimedia.lk இணையத்தளத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

சபாபுத்திரன்


பாகம் - 01

போட்டோவை தமிழில் புகைப்படம் என்றும் அது சார்ந்த கலையை புகைப்படக் கலை என்றும் அது சார்ந்த கலைஞனை புகைப்படக் கலைஞன் என்றும் பன்நெடுங்காலமாக பழகிப்போன எமக்கு ஒளிப்படம், ஒளிப்படக்கலை, ஒளிப்படக் கலைஞன் ஒளிப்படக் கண்காட்சி என்ற செல்லாடல்களை ஏற்றுக் கொள்வதென்பது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும் என்று எனக்குப் புரிகின்றது. அது புத்திக்குப் பிடிபட்டாலும் மனம் இன்னும் அதை ஏற்றுக்கொண்டபாடில்லை.

இருந்தும் நாம் இந்தத் தெடர் மூலம் பகிர்ந்துகொள்ள இருப்பது புகை சார்ந்த விடயமல்ல என்பதைப் புரிந்து கொண்டால் மேற்குறித்த சொல்லாடல்கள்களைப் புரிந்துகொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்காது. என்ன, இன்னும் புரியவில்லையா? நான் நேரடியாகவே விடயத்துக்கு வருகிறேன்.

"φωτός" என்னடா Font மாற்றாம விட்டு விட்டார்களா என்று யோசிக்க வேண்டாம். இது கிரேக்க மொழியில் Photo இதன் அர்த்தம் ஒளி. கமரா கூட ஒளியை மையமாக வைத்தே காட்சிகளைத் தன்வசப்படுத்துகின்றது. இங்கு புகைக்கும் இக் கலைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை (?). நிற்க இக்கலையை புகைப்படக் கலை எனப் பயில்வது எங்கனம்? ஆகவேதான் இத்தொடரின் மூலம் உங்களை ஒரு புகைப்படக் கலைஞனாக அல்லாமல் ஒளிப்படக்கலைஞனாக மாற்றலாம் என எண்ணுகின்றேன்.

  ஒளிப்படங்களை இரசித்தல் ஒரு தவம், ஒரு தியாணம் இரசிக்கும் போது வேறு சிந்தனைகளின்றி மனம் அதிலே ஒன்றித்து விடுகின்றது. எத்தனையோ ஒளிப்படங்கள் இருந்தாலும் சில ஒளிப்படங்கள் மட்டுமே எமது அனுமதியின்றி நம் மனதோடு பசைதடவி ஒட்டிக்கொள்கின்றன. அப்போதுதான் அந்த ஒளிப்படக் கலைஞனை நாம் ஒருகணம் சிந்திக்கின்றோம். உண்மையில் ஒரு ஒளிப்படக் கலைஞன் இது எனது ஒளிப்படம் என்று பெருமையாகப் பேசுவதைவிட ஒரு ஒளிப்படம்தான் அதை எடுத்த கலைஞனைப்பற்றி பெருமையாகப் பிறரைப் பேசவைக்கவேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இதையெல்லாம் விட்டுவிட்டு ஒளிப்படம் எடுப்பது எப்படி என்று சொல்லுங்க?

என்று இப்போ உங்கள் மனம் காதிற்குள் முணுமுணுக்கலாம். இருந்தும் இந்தொடர் ஆரம்பத்தில் ஒளிப்படம் எடுக்கும் முறை பற்றியோ அதன் நுணுக்கங்கள் பற்றியோ கதைக்க முற்படப்போவதில்லை என்று முன்னரே சொல்லிவிடுகின்றேன். ஏனென்றால் ஒரு ஒளிப்படம் எடுக்க முன்னர் நாம் அறியவேண்டிய விடயங்கள் நிறைய இருப்பதாகவே நான் எண்ணுகின்றேன். 

ஒரு உருவத்தை மாணவன் ஒருவன் பாடசாலையில் களிமண்ணில் செய்வதற்கும், அதே உருவை ஒரு சிற்பி கல்லில் உளி கொண்டு பொழிவதற்கும் நிறையவே வேறுபாடுகள் இருப்தை நீங்கள் அறிவீர்கள் இதே வேறுபாடுதான் ஒளிப்படத்திற்கும் ஒளிப்படக்கலைக்கும். எனினும் ஒரு நூலளவான நுட்பமே இரண்டையும் பிரிக்கிறது.

நீர்வீழ்ச்சியைக் கண்டவுடன் அதற்கு முன் நின்று செல்பி ஒன்று எடுத்து உடனே பேஸ்வுக் இல் போடுவதற்கும், அதே நீர்வீழ்ச்சியை ஒரு ஒளிப்படக்கலைஞன் பல கோணங்களில் அவதானித்து பொருத்தமான ஒளியைப் பெற்றுக்கொடுத்தும் அவ்வொளியை கமரா மூலம் கட்டுப்படுத்தியும் பின் அதனைப் பார்ப்பவர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றங்களை ஏற்படுத்தியும் அதனை பொருத்தமான அளவில் பொருத்தமான ஊடகத்தில் பிறின்ற் செய்து அதற்கேற்ப சட்டகமிட்டு (Frame) காட்சிப்படுத்துவதற்கும் நிச்சயமாக வேறுபாடு இருப்பதை நீங்கள் உணர்ந்துகொண்ட சந்தர்ப்பங்கள் இருக்கலாம். இதுவரை நீங்கள் உணராவிட்டால் இத்தொடர் உங்களுக்கு அவ்வாறானதொரு அனுபவத்தை ஏற்படுத்த வழிசெய்யும் என்பது எனது எதிர்பார்ப்பு.

ஒரு தனி மனிதன் முதல் ஒரு நாடு வரை அவன் அல்லது அதன் நிலையை மாற்றும் வல்லமை இந்த ஒளிப்படங்களுக்கு உண்டு. இது வெறும் பேச்சு மட்டுமல்ல மிக நீண்ட வரலாற்றுச் சம்பவங்களும் என் இக் கூற்றுக்குச் சாட்சி சொல்லும்.

 கமராக்களைப் பற்றிய அறிதலுக்கு முன் கமராவின் ஆற்றல்களையும் அது சமூகத்தில் அல்லது தனி மனிதனில் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் பற்றிய அறிதல் அவசியமானதென எண்ணுகின்றேன். ஏனென்றால் ஆயிரம் சொற்களால் விபரிக்க முடியாத விடயத்தைக் கூட ஒரு ஒளிப்படம் மிக இலகுவாக நமக்கு சொல்லிவிட்டுப் போகிறது. 

 சிறியவர் முதல் பெரியவர்வரை ஒரு புதுப் புத்தகத்தில் உள்ள படங்களை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்த பின்னரே தான் புத்தகம் சொல்லும் கதையைக் கேட்டகத் தயாராகின்றனர். அதுவரை அவர்களுக்கு அந்தக் பொக்கிசம் பற்றி சொல்லும் நபர் நம் ஒளிப்படம் தான்.

 ஆக இந்தப் ஒளிப்படங்களைக் கையாளும் போது நாம் மிகக் கவனமாகவும் சமூகப் பொறுப்புடனும் இருக்கவேண்டும். என்ற விடயத்தின் முனைப்பகுதி இப்போது உங்களுக்கு ஓரளவு தெரியத் தொடங்கலாம். இந்தப் ஒளிப்படங்கள் வரலாற்றில் ஏற்படுத்திய விளைவுகளையும் தாக்கங்களையும் சொல்லிய பின் ஒரு ஒளிப்படக் கலைஞனின் சமூக வகிபாகம் உங்களுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கும். அதன் பின் நீங்கள் எடுக்கும் ஒளிப்படத்திற்கும் இப்போது நீங்கள் எடுக்கும் ஒளிப்படத்திற்கும் நிறைய வித்தியாசங்களும் இருக்கக் கூடும். அது எனது இக் கட்டுரையின் வெற்றியாக கருதுகின்றேன். இக்கட்டுரை மட்டுமே உங்களை ஒரு சிறந்த ஒளிப்படக் கலைஞனாக்கும் என்றில்லை கடைசி ஒளிப்படக்கலை பற்றிய தேடலை உங்களுக்குள் ஏற்றடுத்த ஏதுவாய் அமைந்தாலும் மகிழ்ச்சி.

தொடரும்...