சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்னெடுத்து வரும் பல்வேறு வேலைத்திட்டங்களின் 3-வது கட்டமாக, "சிறப்பு பட்டிமன்ற நிகழ்வு" தமிழகத்திலிருந்து வருகை தந்த முனைவர் S.D. கலையமுதன் பங்கேற்புடன் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில், பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இந் நிகழ்வு இனிதே இடம்பெற்றது.
இலங்கை மற்றும் இந்தியாவில் இதுவரை 165 பட்டிமன்றங்களை வெற்றிகரமாக நிகழ்த்திய கதிரவன் பட்டிமன்றப் பேரவையினால் இப்பட்டிமன்றம் முன்னெடுக்கப்பட்டது.
பெரிய உப்போடை நிருத்திய கலாலயா மாணவர்களின் வரவேற்பு நடனத்துடனும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஸ்ரீ சிவசக்தி கலாலயா மாணவர்களின் தமிழ்மொழி வாழ்த்து பாடலுடன் இந் நிகழ்வு ஆரம்பமானது.
தமிழகத்திலிருந்து வருகை தந்த பிரபல வழக்கறிஞர், பட்டிமன்ற நடுவர் மற்றும் ஆன்மீக இலக்கியச் சொற்பொழிவாளர் "தமிழ்த்தென்றல் ஞானச்செல்வேல்" முனைவர் S.D. கலையமுதன் அவர்கள் நடுவராகப் பங்கேற்று, தனது நகைச்சுவையான மற்றும் சிந்தனைமிக்க பேச்சால் நிகழ்வைச் சிறப்பித்ததோடு பெண்களை கொண்டாடும் ஆண்கள் குறைவு / அதிகம் எனும் சுவாரஷ்யமான தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமானது பார்வையாளர்களின் பலத்த கரகோசத்துடன் நடைபெற்றது.
உதவிப்பிரதேச செயலாளர்களான திருமதி லட்சண்யா பிரஷாந்தன், திருமதி. சுபா சதாகரன், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
பிரதேச செயலாளரின் வழிகாட்டலில், கலாசார பிரிவு மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவினரால் இந்த நிகழ்வு மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

















































