பேச்சி அன்னையின் கடாட்சத்துடனும், பரம ஹம்சரின் தெய்வ ஆசியுடனும் கால்கோள் நூற்றாண்டில் கால் பதித்து நிற்கும் கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயம்

 

 





 














பேச்சித் தாயாரின் கட்டளையுடன் ஆலய தர்ம கர்த்தா அமரர் K.O. வேலுப்பிள்ளை அவர்கள் (K.O.V) சுவாமி.  விபுலானந்தர் அவர்களை  சந்தித்து  அழைப்பு விடுத்தன் பிரகாரம், 10.04.1925 அன்று  பிரதேச  மக்களின்   பெருவரவேற்புடன் சுவாமி. விபுலானந்தர் அவர்கள்   பேச்சி தாயாரின் முன்றலுக்கு அழைத்து வரப்பட்டார் ,    இதன்   பயனாக  அவ்விடத்தில் ஆங்கில பாடசாலை அமைப்பதற்கான  தீர்மானங்கள் எட்டப்பட்டன.

    இதன் பிரகாரம் 26.11.1925 அன்று ஆலய தர்ம கர்த்தா அவர்கள் தனக்கு சொந்தமான 01 ஏக்கர் நிலத்தில் சுவாமி. விபுலானந்தர் அவர்களின் திருக்கரத்தால் வித்தியாலயத்திற்கான அடிக்கல்லை நடவைத்து, சொந்த நிதியில் ஆரம்ப கட்டிடத்தை அமைத்து அன்பளிப்பாக 25.04.1928 அன்று சுவாமி. விபுலானந்தர் அவர்கள் மூலம் இராமகிருஷ்ண மிஷனுக்கு கையளித்தார்.

அன்றைய தினம் ஆலய தர்ம கர்த்தா அவர்களால் 15ஏக்கர் நிலமும்  (மைதானம், விடுதி, சிவபுரி, விபுலானந்தர் சமாதி, மணிமண்டபம் என்பன அமைய பெற்றுள்ள  நிலங்கள் )  அத்துடன்      வித்தியாலய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சைவப்பள்ளி (தற்போதைய விவேகானந்தா மகளிர் கல்லூரி ) அபிவிருத்திக்காக அப்பாடசாலை ஸ்தாபகர்களான கதிர்காமத்தம்பி உடையார் அவர்கள், சபாபதிப்பிள்ளை உடையார் அவர்கள் இருவரும் இணைந்து 24.07.1912அன்று வைப்பிலிட்டிருந்த ஐயாயிரம் ரூபாய்களை (5000/=)நிதி தத்துவக்காரர் என்ற அந்தஸ்திலிருந்து   2809 சாசனம் மூலம் சட்டரீதியாக கையளித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதன் பயனாக ஆயிரக்கணக்கான நற் பிரஜைகளை உருவாக்கி நிமிர்ந்து நிற்கும் வித்தியாலயத்தின் கல்விப் பணிகளை சுவாமி விபுலானந்தர் அவர்கள் 01.05.1929 அன்று ஆரம்பித்ததுடன், இராமகிருஸ்ண மிஷன் செயற்பாடுகளை 26.11.1929 அன்று இக்கட்டிடத்தில் ஆரம்பித்து ஆன்மீகத்துடன் சேர்ந்த கல்விப்  புரட்சிக்கும் வித்திட்டார்.
,
சுவாமி. விபுலானந்தர் அவர்களினதும், மிஷன் துறவிகளினதும் ஆசிபெற்று ஒளிவீசும் புனித இடமாக இவ்வளாகம் பிரகாசித்து நிற்கின்றது. 1931ம் ஆண்டு பாடசாலை நிர்வாகத்தை முழுமையாக பொறுப்பேற்ற இராமகிருஷ்ண மிஷன், துறவிகளின் அர்ப்பணிப்புள்ள சேவை வழிகாட்டலுடன் ஆங்கில புலமை நல்லொழுக்க விழுமியங்கள் கொண்ட மாணவர்களை உருவாக்கி 1963ம் ஆண்டு இலங்கை அரசிடம்  நிர்வாகத்தை  மிஷன் ஒப்படைத்தது.

 இவ் வரலாற்று அடையாளங்களை     பாதுகாக்கும் நோக்கில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும், பழைய மாணவர்கள் சங்கமும் இணைந்து ஆரம்ப கட்டிட மீள் திருத்த நடவடிக்கைகளை, சுவாமி.  நீலமாதவானந்தஜி மகராஜ்  அவர்களின் திருக்கரத்தால் ஆரம்பித்து வைத்திருப்பது  பெரும் ஆசியாக  அமைந்து     பலராலும் பாராட்டி, போற்றப்படுகின்றது.
நூற்றாண்டு காணவிருக்கும் பாடசாலையை பேச்சித் தாயாரின் கடாட்சத்துடனும் , பரம ஹம்சரின்  தெய்வ ஆசியுடனும் வாழ்த்தி  நிற்கின்றோம்.

செய்தி ஆசிரியர் மற்றும் பிரபா பாரதி