பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

 


எதிர்பாராத விதமாக உயிரிழந்த கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவரின், சிறுநீரகம் உட்பட வேறு ஒருவருக்குப் பொருத்தக்கூடிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார விஞ்ஞான பீடத்தில் தாதியியல் மற்றும் குடும்ப நலப் பட்டப் படிப்பை பயின்று வந்த மூன்றாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்தநிலையில், பெற்றோரின் தீர்மானத்துக்கமைய, அவரது உறுப்புகள் அகற்றப்பட்ட பின்னர், மாணவியின் பிரேதப் பரிசோதனை கண்டி தேசிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. 

 இந்தப் பிரேதப் பரிசோதனையின்போது, முதுகெலும்பு சுருக்கத்தால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களைக் கருத்தில் கொண்ட கண்டி தேசிய மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி சந்திரவன்ச வரகாவுல்ல, இது முதுகெலும்பு சுருக்கத்தின் சிக்கல்களால் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக ஏற்பட்ட திடீர் மரணம் என்று தீர்மானித்தார். 

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த 5 ஆம் திகதி தனது வீட்டிற்கு வந்திருந்த இந்த மாணவி, 6 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில், தனது வீட்டில் உள்ள குளியலறையில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டார்.

பின்னர் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  உயிரிழந்தார்.