கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகளின் தரவுகளைப் புதிப்பிக்கும் நடமாடும் சேவை நேற்று மீராவோடை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்அஸ்வெசும உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகர்களும் கலந்து கொண்டனர்.
பிரதேச மக்களின் நலன்கருதி காலடியில் சேவையை விஸ்தரிக்கும் பிரதேச செயலாளரின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்பட்டதுடன், இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வயோதிபர்களும் கலந்து கொண்டு தமது தகவல்களைப் புதுப்பித்துக் கொண்டனர்.
அத்துடன், குறித்த செயற்பாடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பொதுமக்கள் வீண் அலைச்சல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவரவர் கிராம சேவகர் பிரிவுகளில் குறித்த அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் வரை பொறுமையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதன் மூலம் வீண் அலைச்சல், பொருளாதாரச்செலவு, அலுவலகங்களில் காத்திருப்பு போன்ற செயற்பாடுகள் தவிர்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலடியில் பிரதேச செயலக செயற்பாடு எனும் பிரதேச செயலாளரின் தூரநோக்கு நிறைவான விரைவான சேவையை மக்கள் காலடியில் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ந.குகதர்சன்







