ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் விந்தன் கனகரெட்ணத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடிவு… (பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்)




டெலோ கட்சியின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரெட்ணம் டெலோவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மீது தனியார் தொலைக்காட்சி ஒன்றினூடாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும் முகமாக விந்தன் கனகரெட்ணத்திற்கு சட்டத்தரணியூடாக கோரிக்கைக் கடிதமொன்று 14 நாட்கள் அவகாசம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கநாதன் தொடர்பான விடயங்கள் பேசுபொருளாக இருந்து வந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற டெலோவின் தலைமைக்கு குழுக் கூட்டத்திலும் இவை தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்றன.

அதன் தொடர்ந்தேர்ச்சியாக டெலோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் உறுப்பினரான விந்தன் கனகரெட்ணம் அவர்கள் அண்மையில் தனியார் தொலைகாட்சியொன்றின் செவ்வியில் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் பல விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த விடயங்கள் ஆதாரமற்றவை எனவும், மக்களிடமிருந்தும், கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்தும் என்னை ஓரம்கட்ட வைக்கும் செயற்பாடுகள் என்பதைச் சுட்டிக்காட்டி செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் விந்தன் கனகரெட்ணம் அவர்களுக்கு சட்டத்தரணியூடாக கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,

கடந்த ஓரிரு நாட்களாக என்னை அவதூறு பரப்புகின்ற வகையிலே நான் விரும்புகின்ற, போராட்ட காலத்திலே போராட்ட விடயங்களை துணிச்சலோடு வெளியிட்ட, இன்றைக்கும் மக்கள் ஆதரவு கொண்ட ஊடகமான ஐ.பி.சி ஊடகத்திலே பொய்யான கருத்துக்களைச் சொல்லக் கூடிய எமது கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட திருவாளர் நடராஜா பெஞ்சமின் கனகரெட்ணம் அவர்களைப் பேட்டிகண்டு என்னைப் பற்றிய பாரிய அவதூறுகளை முன் வைத்தமை எனக்கு பாரிய மனவருத்தத்தைத் தருகின்றது. 

அந்த வகையிலே குறித்த கூற்றுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை. எனவே நான் எனது சட்டத்தரணியூடாக அவருக்கு நட்டஈடு கோரி எனது கோரிக்கைக் கடிதத்தை விந்தன் கனகரெட்ணம் அவர்களுக்கு அனுப்பியிருக்கின்றேன். 

எனது மக்கள் மத்தியிலே என்னை மிக மோசமாக வர்ணிக்கின்ற, மக்கள் மத்தியிலிருந்தும், அரசியலில் இருந்தும் என்னை ஓரம்கட்ட வைக்கின்ற ஒரு செயற்பாட்டை எனக்கு மனவருத்தம் தருகின்ற நிலையிலும் இந்த விந்தன் கனகரெட்ணம் அவர்கள் தொடர்ந்து அவரது கருத்தைப் பதிவினூடாக மேற்கொண்டு வருகின்றார். அந்த அடிப்படையில் அவருக்கு 14 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

நான் நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன். திருவாளர் நடராஜா பெஞ்சமின் கனகரெட்ணம் அவர்கள் நீதிமன்றத்திலே தான் என்மீது வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

அதேபால் இந்த நிமிடம் வரைக்கும் இலங்கையில் எந்தப் பகுதிகளிலும் உள்ள நீதிமன்றம், பொலிஸ் நிலையங்களில் எனக்கு எவ்வித வழக்குகளோ, முறைப்பாடுகளோ இல்லை என்பதை நான் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

சிவில், குற்றவியல், போதை போன்று எந்தவொரு செயற்பாடும், குற்றச்சாட்டுகளும் எந்தவொரு நீதிமன்றத்திலோ, பொலிஸ் நிலையத்திலோ இல்லை என்பதை நான் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கின்றேன். அந்த வகையிலே என்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தினூடாக முன்கொண்டு செல்வதற்கு நான் தீர்மானித்துள்ளேன் என்று தெரிவித்தார்.