ஆனந்தசுதாகர் உட்பட சிறைகளில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள
இலங்கையர் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இதனை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை
ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில்
தாம் பரிசீலனை செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர் தினம் தொடர்பில், தமிழ்
அரசியல்வாதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக்
கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான
கிளிநொச்சி மருதநகரைச் சேர்ந்த ஆனந்தசுதாகருடைய மனைவி ஏற்கனவே
உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய இரண்டு பிள்ளைகளையும் பராமரித்து வந்த
பாட்டியும் உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில், அந்த பிள்ளைகள்
நிர்க்கதியாகியுள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதியிடம் தாம் எடுத்துரைத்துள்ளதாக
நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விடயத்தில்
மனிதாபிமானத்துடன் அணுகி, எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இலங்கையர்
தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதி செய்து
நல்லிணக்கத்தினை வெளிப்படுத்துமாறு தாம் வலியுறுத்தியதாகவும் ரவிகரன்
கூறியுள்ளார்.





