முகநூல் ஊடாக கப்பம் கேட்ட இருவர் மட்டக்களப்பில் கைது

 


மட்டக்களப்பு- புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம் முகநூல் ஊடாக கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்  நேற்றையதினம் உத்தரவிட்டுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது, 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின்  வாட்சப் செயலிக்கு புகைப்படம் ஒன்றை நேற்றுமுன்தினம் (14) அனுப்பி, உனது முகநூல் பக்கத்தை ஹேக் செய்து அதில் உள்ள காணொளிகளை, புகைப்படங்களை தரவு இறக்கம் செய்துள்ளதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 70 ஆயிரம் ரூபா பணம் தருமாறு கப்பம் கோரியதுடன் பணம் தர மறுத்தால் அந்த வீடியோக்களை புகைப்படங்களை முகநூல் ஒன்றில் தரவேற்றம் செய்வேன் என நபரொருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் பணம் தருவதாகவும் தற்போது கையில் பணம் இல்லை சீலாமுனையில் உள்ள வங்கியிலுள்ள ஏ.ரி.எம் இயந்திரத்தில் எடுத்து தருவதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கப்பம் கோரியவர் தான் ஒரு இளைஞன் ஒருவரை அனுப்புவதாகவும் அவரிடம் ஒன்றும் பேசக்கூடாது பணத்தை வழங்கி வைக்குமாறு தெரிவித்த நிலையில் குறித்த வங்கியிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரத்துக்கு சென்று காத்திருந்தபோது, கப்பம் கோரியவர் அனுப்பப்பட்ட இளைஞனை அடையாளம் கண்டு கொண்டார்.

இதையடுத்து அந்த இளைஞரிடம் நீ இன்னாரது சகோதரன் தானே என வினாவி உறுதிபடுத்திக் கொண்டு அவரிடம் பணம் ஏ.ரி.எம். இயந்திரத்தில் இருந்து எடுக்க முடியவில்லை நாளைக்கு எடுத்து தருவதாக தெரிவித்து அந்த இளைஞனை அங்கிருந்து அனுப்பிவிட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 24 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்ததுடன் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.