அனர்த்தங்கள் காரணமாக
மனஅழுத்தங்கள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற
தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு
பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் மனித
மனங்களை அது நேரடியாகப் பாதிக்கக்கூடும் என்பதால், மக்களிடையே மனஅழுத்தம்
ஏற்படுவது சாதாரணமானது என்று ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும்
இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், மியுரு சந்திரதாச தெரிவித்துள்ளார்.
யாரேனும் அத்தகைய மனஅழுத்தத்திற்கு
ஆளாகியிருந்தால், முதலில் பிரச்சினையை அடையாளம் காண வேண்டும் எனவும்,
பின்னர் அந்தப் பிரச்சினைக்கான தீர்வைக் கண்டறிய வேண்டும் எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த அனர்த்தம் காரணமாக
பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பின், அவர்களின் வாழ்க்கையை
இயன்றவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் எனவும் மியுர
சந்திரதாச வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மன அழுத்தத்திற்கு
ஆளாகியிருந்தால் கோபம் வருதல், தூக்கமின்மை, பசியின்மை, சோர்வு போன்ற
அறிகுறிகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்கள் காரணமாக எதிர்காலம் மீதான
நம்பிக்கையையும் கைவிட வேண்டாம் என்றும், வீட்டை இழந்திருந்தாலும்,
குடும்பத்தில் ஒருவரை இழந்திருந்தாலும் உங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை
மாத்திரம் கைவிட வேண்டாம் என்றும் மனநல மருத்துவ நிபுணர் மியுர சந்திரதாச
தெரிவித்துள்ளார்.





