தவறிழைத்துவிட்டு உலகில் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாதெனவும், மத்திய வங்கி ஊழல்கள் தொடர்பில் அர்ஜுன மகேந்திரன் மீதும் சட்டம் பாயுமென்றும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாட்டின் சமகால விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் குறிப்பிட்டதாவது;
பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு முடிவு கட்டப்படும் என நாம் உறுதியளித்திருந்தோம். இதற்காக பொலிஸார் உட்பட பாதுகாப்பு துறையினருக்கு தேவையான வளங்களை வழங்கினோம். அவர்கள் சிறப்பாக தமது கடமைகளை செயல்படுத்தி வருகின்றனர்.
போதைப் பொருள் கடத்தல் மன்னர்கள் சிக்கி, சிறைக்கு சென்றுள்ளனர் .நீதிமன்றத்தக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றவர்களும் கைதாகியுள்ளனர்.இதற்கு முன்னர் இவ்வாறான கைதுகள் இடம்பெற்றிருக்கவில்லை. கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்றிருந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாதிருந்தது. செவ்வந்தி உள்ளிட்டவர்களை பிடிப்பதற்குகூட தெம்பு இல்லை எனவும் எதிரணியினர் கூச்சலிட்டனர். ஆனால் எந்த கொம்பனாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது இன்று நிரூபணமாகி வருகிறது.குற்றவாளிகளை அரசியல்வாதிகள்
பாதுகாத்து வந்த யுகம் மாறிவிட்டது. எமது ஆட்சியில் குற்றவாளிகளுக்கு இடமில்லை. மக்களுடைய சொத்துகளை களவாடியவர்கள், சூறையடித்தவர்கள் சட்டத்தின் பிடிக்குள் சிக்குவார்கள். மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரன் விடயத்திலும் சட்டம் செயற்படும்.