கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான் (Masoud Bejaskian) காயம் அடைந்தாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேலைத் தளமாக கொண்டு இயங்கும் செய்தி நிறுவனமான தி டைம்ஸ் ஒப் இஸ்ரேல் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
 
எனினும் ஈரான் இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை
 
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், இதனால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் எனக்கூறி கடந்த மாதம் அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 
 
ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் என்பவற்றைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தப்பட்டது. 
 
இதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது. 
 
இதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். 
 
அமெரிக்காவின் தலையீட்டால், இரு தரப்புக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது. 
 
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான் (Masoud Bejaskian), ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகேர் (Muhammad Bagher), நீதித்துறைத் தலைவர் மோசெனி எஜெய் (Moseni Ezei) உள்ளிட்டோர் ஈரான் தேசிய பேரவை கூட்டமொன்றில் கலந்துகொண்டனர். 
 
இக்கூட்டம் நடந்த கட்டடத்தைக் குறிவைத்து, ஆறு ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியது. 
 
இதில், ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான் உட்பட சிலர் காயமடைந்தனர் என ஈரான் புரட்சிகரப்படையுடன் தொடர்புடைய அமைப்பு தற்போது செய்தி வெளியிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 
 
இஸ்ரேல் தன்னை கொலை செய்ய சதி செய்வதாக மசூத் பெஜஸ்கியான் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.