
மட்டக்களப்பு குழந்தை யேசு முன்பள்ளி பாலர் பாடசாலை CHILD JESUS FREE- SCHOOL சிறார்களின் விளையாட்டு விழா சனிக்கிழமை (12) புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது .
குழந்தை யேசு முன்பள்ளி பாலர் பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி ரூபினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவிற்கு ,கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை ஒகஸ்ரின் நவரெட்ணம் பிரதம அதிதியாகவும்,மட்டக்களப்பு முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் மற்றும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் டி .மேகராஜ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் பங்கேற்றிருந்தனர்.
விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வாக முன்பள்ளி சிறார்களால் அதிதிகளுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் .
அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் , மற்றும் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு தேசிய கொடியும் பாடசாலை கொடியும் அதிதிகளால் ஏற்றி வைக்கப்பட்டன .
இதனை தொடர்ந்து ஒலிம்பிக் சுடரேற்றி மாணவர்களின் சத்தியபிரமாண நிகழ்வுடன் விளையாட்டுகள் ஆரம்பமானது. இப்பாடசாலையின் இல்லங்களான தெரேசா, அவிலா, வெரோணிக்கா ஆகிய இல்ல சிறார்களின்ளின் விளையாட்டுகள் மிக சிறப்பாக இடம்பெற்றன.
நிகழ்வின் போது வேறு எந்த முன்பள்ளியிலும் இடம் பெறாத புது விதமான விளையாட்டுக்கள் முன்பள்ளி நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சிறார்கள் உற் சாகத்துடன் நிகழ்வில் பங்குபற்றி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்துடன் விளையாட்டுக்கள் இடம் பெற்றன .
சிறார்களை பொறுத்தவரை விளையாட்டை ஒரு போட்டியாக பார்க்காமல் இதை ஒரு சராசரி நிகழ்வாக கருதவேண்டும் என அதிதிகள் உரையின் போது தெரிவிக்கப்பட்டது .
மாணவர்களின் விளையாட்டுகளை தொடர்ந்து, ஆசிரியர்கள், பெற்றோர்கள், விளையாட்டுகளும் வினோத உடை போட்டிகளும் இடம்பெற்றன. பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கப்பட்டன.