சுவசக்தி விசேட தேவையுடைய அமைப்பின் உறுப்பினர்களுக்கும் மட்டக்களப்பு பிரதேச சர்வ மத குழு உறுப்பினர்களுக்குமிடையில் நல்லிணக்க சந்திப்பு!!

 



இலங்கை சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சர்வ மத குழு உறுப்பினர்களுக்கும் மாவனெல்ல பிரதேச சுவசக்தி விசேட தேவையுடைய அமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் நல்லிணக்க சந்திப்பொன்று மட்டக்களப்பில்  இடம்பெற்றது.

மாவனெல்ல பிரதேச செயலாளர் திருமதி.விஜானி ரத்னசேகர அவர்களது தலைமையில் நல்லிணக்க ரீதியாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 175 இற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். 

இவ்வாறு நல்லிணக்க விஜயத்தினை மேற்கொண்ட குழுவினரை மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சர்வ மத குழுவின் ஒருங்கிணைப்பாளர் நகுலேஸ் துரைசிங்கம் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு பிரதேச சர்வ மத குழுவின் உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சம்மேளனத்தின் தலைவரும் சிரேஸ்ட ஊடகருமான உ.உதயகாந்த் உள்ளிட்ட சமாதான நீதவான்கள் சம்மேளனத்தின் சில உறுப்பினர்களும் கலந்துகொண்டு வருகைதந்தவர்களை மாலை அணிவித்து வரவேற்று, நல்லிணக்கம் தொடர்பாக இரு தரப்பினர்களுக்குமிடையில் கலந்துரையாடப்பட்டதுடன், மட்டக்களப்பிற்கே தனித்துவமான விருந்தோம்பல் பரிமாறப்பட்டதுடன், மாவனெல்ல பிரதேச செயலாளர் திருமதி.விஜானி ரத்னசேகர அவர்களால் அவர்களது பாரம்பரிய உணவு பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானத்தை வலியுறுத்தி பல்வேறுபட்ட செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சர்வ மத குழு  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.