மட்டக்களப்பு வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்திய வருடாந்த கிராமிய விளையாட்டு விழா கழகத் தலைவர் திரு.ஈ.அஜய் தலைமையில் நேற்று (20) பிற்பகல் 03.00 மணியளவில் வந்தாறுமூலை உப்போடை வீதியில் உள்ள டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இவ் விளையாட்டு விழாவில் முதலில் அதிதிகள் வரவேற்பு இடம்பெற்று தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைக்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மிட்டாய் ஓட்டம், கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல், சாப்பாட்டு ராமன், கயிறு இழுத்தல், நிற முட்டி உடைத்தல், தலையணைச் சமர், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற பல்வேறுபட்ட போட்டிகள் நடைபெற்றன.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் இளையதம்பி சிறிநாத், ஜனாதிபதி செயலக நிர்வாக அபிவிருத்திப் பிரிவு ஜனாதிபதி உதவிச் செயலாளர் திரு.ந.சஞ்சீவன், கௌரவ அதிதிகளாக ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன் மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் பிரபாகரன், சிறப்பு அதிதிகளாக மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய அதிபர் திரு.த.கிஸ்ணகாந், மட்/ககு/வந்தாறுமூலை கணேஷ வித்தியாலய அதிபர் திரு.சி.மதிவர்ணன், மட்/ககு/வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய அதிபர் திரு.ச.வேதநாயகம் மற்றும் அரச அதிகாரிகள், கழக உறுப்பினர்கள், கழக முன்னாள் உறுப்பினர்கள், கழக ஆலோசகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இப் போட்டிகளில் பங்கு பற்றியவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.