மட்டக்களப்பு கல்லடி - உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் அடிகளாரின் 78 வது சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராச், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா, மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் முத்துகுமார் செல்வராசா மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர், கல்லடி உப்போடை விவேகானந்தா கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அடிகளாரது சமாதிக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து ''வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ'' பாடல் இசைக்கப்பட்டு சிரார்த்த தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது.
அத்தோடு சிவானந்தா தேசிய பாடசாலையின் மாணவர்களின் பங்கேற்புடன் சுவாமியின் திருவுருவ படம் தாங்கியவாறு மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி வழியாக ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டு, நாவற்குடாவை சென்றடைந்து அங்கிருந்து மீண்டும் சிவானந்தா பாடசாலையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.