தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான குழுவொன்று ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தாக்கியுள்ளனர்.
நேற்று (11) கல்முனையிலிருந்து மாளிகைக்காட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான சிலர் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் காரைதீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேகமாக உடனுக்குடன் செய்திகள் மற்றும் ஆய்வு கட்டுரைகள் எழுதும் ஆற்றல் கொண்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் பிரபல சமூக செயற்பாட்டாளராகவும், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விரோத செயல்களை துணிந்து கேள்விக்குட்படுத்தி செய்திகள் எழுதி, ஆய்வு கட்டுரைகள் எழுதி வந்த இவர் மீதான தாக்குதலுக்கு பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் சமீபத்தைய நாட்களில் செயற்பாட்டு ஊடகவியலாளர்கள் மீது அரசியல்வாதிகள் தாக்குதல் நடத்துவதும், அச்சுறுத்துவதும் வாடிக்கையாகி வருவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.