யாழ்.நாவற்குழி திருவாசக அரண்மனை வளாகத்தில் “சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" நேற்று (14) மாலை திறந்துவைக்கப்பட்டது.
வைத்திய கலாநிதி சன்முகநாதன் அருந்ததி தம்பதிகளின் நினைவாக வைத்திய நிபுணர் மனோமோகன் சிவகௌரி தம்பதிகளால் நாவற்குழி திருவாசக அரண்மனை வளாகத்தில் “சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவாசக அரங்கம் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி. ஆறு திருமுருகன் தலைமையில், வைத்தியநிபுணர் மனோமோகன் தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஆசியுரையை சண்டிலிப்பாய் சரஸ்வதி அம்பாள் உபதேசதிருக்கோவில் சிவஸ்ரீ சபா வாசுதேவக்குருக்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, வாழ்த்துரை, சிறப்புரை இடம்பெற்றது.
அத்துடன் சிவபூமி திருவாசக அரங்க மண்டப திறப்பு விழா சிறப்பு மலர் வெளியீடு செய்யப்பட்டது. நூலின் அறிமுகவுரையை பொறியியலாளர் சந்தோஷ் வழங்கினார்.
இறுதியாக இசை ஆசிரியர்களின் இசை அர்ப்பணமும் பொன்னாலை சந்திர பரத கலாலய இயக்குநரான திருமதி ஸ்ரீதேவி கண்ணதாசனின் நெறியாள்கையில் கலாலய மாணவர்களின் திருமுறை நடன அர்ப்பணமும் இடம்பெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குனராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.