இந்தியா, தருமபுரம் ஆதீனமும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும்"அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு 2025"
தருமை ஆதீன அகில உலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனமும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் அகில உலக சைவ சித்தாந்த 6வது மாநாடு சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த மாநாடு வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெறும்.
எமது தருமை ஆதீனம் திருமறையையும் திருமறையையும் ஒருங்கே போற்றி பணிந்து வரும் மிகவும் தொண்மையான ஆதீனமாகும். தமிழுக்கும் சமயத்திற்கும் என பல்வேறு வகையான சமூகப்பணி, கல்விப்பணி, சமயப்பணி, மருத்துவப்பணி என இடையறாது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த மாபெரும் மாநாட்டில் பல்வேறு சைவ ஆதீனங்களின் மடாதிபதிகள், புகழ்பெற்ற சைவ சித்தாந்த அறிஞர்கள், தமிழ் மொழி ஆர்வலர்கள், ஆய்வுக் கட்டுரையாளர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேலும், இந்த மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட சைவ சித்தாந்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட இருக்கின்றன. சைவ சித்தாந்தம் தொடர்பான 75புதிய நூல்கள் இந்த மாநாட்டின்போது வெளியிடப்படவுள்ளன 8 அறிஞர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கபட உள்ளார்கள்.
இலங்கையில் இருந்து "சிவாகம கலாநிதி" சிவஸ்ரீ. க. வைத்தீஸ்வர குருக்கள், கலாநிதி ஆறு திருமுருகன் ஆகியோர் மாநாட்டில் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
அத்துடன் மேலும் பல சைவப் பெருமக்களும் கலந்து கட்டுரை சமர்ப்பணம் செய்கிறார்கள்.
சைவ சமயத்தின் பெருமையை உலகெங்கும் பரப்பும் இந்த பிரம்மாண்டமான நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு நமது தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
பெருவிழாவாக நடைபெறும் மாநாடு சிறப்புடன் உயர்வுடன் மகிழ்வுடன் கூடியதாக அமைய வேண்டும் என இலங்கை வாழ் சைவ மக்கள் சார்பில் இந்துக் குருமார் அமைப்பினர் உறுதியுடன் இணைந்து வாழ்த்தி நிற்கிறார்கள்,என அமைப்பின் தலைவர், சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க வைத்தீஸ்வர குருக்கள் தெரிவித்துள்ளார்.