இலங்கைக்கு இன்று 20 ஆம் திகதி ஒரு நாள் விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் எதிர்க்கட்சி த்தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், மலையகக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
இந்திய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் வெளிவிவாகார அமைச்சர் பதவியை ஏற்றுள்ள காலநிதி ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது, இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் உட்பட பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக களநிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இந்திய ப்பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.