வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் பேத்தாழை பொதுநூலகத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 78ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டன.
பேத்தாழை பொதுநூலகப் பொறுப்பாளர் அ.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் எம்.அப்துல் ரஸாக் அவர்கள் சுவாமி விபுலானந்தர் பற்றிய நினைவுப்பேருரையினை வழங்கினார்.
அத்துடன், தேசிய அளவில் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழின் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்த வாழைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த ”கலாபூஷணம்” தாழை.செல்வநாயகம், வாழைச்சேனை எச்.மெத்தியேஸ், கறுவாக்கேணி முத்துமாதவன் ஆகிய மூத்த கலைஞர்களுக்கு “சுவாமி விபுலானந்தர் நினைவு முத்தமிழ் கலைஞர் -2025” எனும் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
சுவாமி விபுலானந்தரின் 78ஆவது நினைவு நாளினை முன்னிட்டு நூலகத்தின் இம்மாத நிலா முற்ற நிகழ்வும் விபுலானந்தரின் பல்துறை ஆளுமை, பணிகள் எனும் தலைப்பில் நடத்தப்பட்டது. அத்துடன் நூலகம் அமைந்துள்ள பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக சுவாமி விபுலானந்தர் பற்றிய பேச்சுப் போட்டி, வினாவிடைப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவையும் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பும் இன்றைய தினத்தில் நடைபெற்றது.
விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சு.சுதாகரன் விபுலானந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மாியாதை செலுத்தி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
“அபிநயம்” கலை மன்ற மாணவிகளால் விபுலானந்தரின் “வெள்ளை நிற மல்லிகையோ” பாடலுக்கு வரவேற்பு நடனம் நிகழ்த்தப்பட்டது. தரம்-5 மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் சிறப்புப் பேச்சாளராக தெரிவு செய்யப்பட்ட மாணவியின் பேச்சும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமிகள் பற்றிய நினைவுப் பேருரையினை வழங்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் எம்.அப்துல் ரஸாக் அவர்கள் ”இப்படியானதொரு பிரமாண்டமான நூலகத்திலே விபுலானந்தருக்கு நினைவு விழா நடைபெறுவது மனதுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.
உண்மையிலேயே இன்றைய நினைவுநாளில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை விபுலானந்தர் பார்த்துக் கொண்டிருப்பார் என்றால், இந்த மண்டபத்தின் மத்தியில் தான் அவர் இருப்பார். இங்கு நடப்பவைகளை கண்டு மகிழ்ந்திருப்பார்” என்றும், இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழினைத் தாண்டி “நாற்றமிழ்” என்று சொல்லக்கூடிய அளவுக்கு அறிவியல் தமிழ் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவ்வாறு நாற்றமிழிலும் தேர்ச்சி பெற்ற ஒரேயொரு தமிழராக அக்காலத்தில் வாழ்ந்தவர் சுவாமி விபுலானந்தர் மட்டும்தான். அவர், ஒரு துறவியாக இருந்தாலும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.
இவரிடம் ஏராளமான முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயின்றிருக்கிறார்கள். நான் விபுலானந்தரின் மாணவன் என்று பெருமையாகச் சொல்கின்ற ஏராளமான இஸ்லாமியர்களை நான் அறிந்திருக்கின்றேன்.
1892இல் பிறந்து 1947இல் காலமான விபுலானந்தரைப் பற்றி அவர் மறைந்த 78 ஆண்டுகள் ஆகியும் நாம் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்றால் அதற்கு காரணம் அவரது பணிகள் தான். விஞ்ஞானமும் அறிவியலும் பயின்ற ஆன்மீகத் துறவி அவர் ஒருவர்தான். உலகின் முதல் தமிழ் பேராசிரியரும் அவர்தான். இலங்கைத் தமிழர்களின் அடையாளமாக விளங்குபவர் கிழக்கிலங்கையில் தோன்றிய விபுலானந்தர் என்பது நம் எல்லோருக்கும் பெருமை.
அவரது படைப்புக்களை இக்கால தலைமுறையினரிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். அவரது கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் என அவர் காலத்தில் அவர் எழுதியவை ஏராளம். உலகிற்கு பாரதியை அடையாளம் காட்டியவர் அவர்தான்” என சுவாமி விபுலானந்தரைப் பற்றி ஏராளமான விடயங்களை நினைவுப் பேருரையில் பதிவு செய்தார்.
பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சு.சுதாகரன், பிரதேச சபை உறுப்பினர் ந.நிமல்ராஜ், பிரதேச சபை செயலாளர் சு.ராஜ்கீதன், பிரபல எழுத்தாளர் ஜிஃப்ரி ஹாசன், வாழைச்சேனை இந்து கனிஷ்ட வித்தியாலய அதிபரும் வாசகர் வட்ட சிரேஸ்ட உறுப்பினருமான திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகரும் சிவாந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவருமான த.அகிலன், கல்குடா கல்வி வலய தமிழ் பாடத்திற்குரிய ஆசிரிய ஆலோசகர் எ.த.ஜெயரஞ்சித், பிரதேசத்தின் மூத்த எழுத்தாளர் கறுவாக்கேணி முத்துமாதவன் என ஏராளமான அதிதிகளுடன் விபுலானந்தர் வாசகர் வட்டம் மற்றும் விபுலானந்தர் கலை, இலக்கிய மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
ந.குகதர்சன்