FREELANCER
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தையும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து மார்க்கமாக பயன் படுத்தப்படும் பாதைப்படகு நாட்புறமும் துருப்பிடித்து , அடிப்பாகத்தில் பாரிய துவாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இப்படகுப்பாதை தற்போதைய நிலையில் பாவனைக்கு உதவாத நிலையிலேயே உள்ளது.
துவாரங்களின் ஊடாக ஆற்று நீர் படகுக்குள் உட்புகுந்த வண்ணம் உள்ளது , தினமும் படகுக்குள் இருக்கும் நீரை வெளியேற்றிய பின்னரே பயணத்தை தொடர வேண்டி உள்ளது , எந்த நேரமும் படகு நீரில் அமிழ்ந்து விடும் நிலைமையே காணப்படுகிறது
அப்படி என்றால் பொதுமக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிப்பது யார் ? இந்த அவலத்தை தீர்ப்பது யார் ?
இப்போக்குவரத்து மார்க்கத்தினூடாக விவசாயிகள், ஆசிரியர்கள், அரச, மற்றும் அரச சார்பற்ற ஊழியர்கள், வியாபாரிகள் பொது மக்கள் எனப்பலரும் பயணம் செய்து வருகின்றனர்.
அதில் பயணிக்கும் பொதுமக்கள் தினமும் மிகவும் அச்சத்துடன் ,உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கின்றனர் , இப்படியான அபாயகரமான படுகுச்சேவை இலங்கையின் எந்தப்பாகத்திலும் இல்லையென பயணிகள் பேசிக்கொள்வதை கேட்கக்கூடியதாக உள்ளது
அத்தோடு திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பகுதியில் இடம்பெற்ற பாதைப்படகு விபத்தின் பின்னர் பாதுகாப்பான பயணத்திற்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு மேலங்கியினை தற்போது மக்கள் எவரும் அணியாத நிலையில் காணப்படுகிறது.
பாதையை புணரமைத்து பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் பலதடவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்த போதும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ள படவில்லை ,
எனவே பொறுப்பு கூறவல்ல அதிகாரிகள் தாமதிக்காமல் புதிய பாதையை பெற்று கொடுக்கவேண்டும் அல்லது பாவனையில் உள்ள பாதையை திருத்தி அமைத்து நவீன முறைப்படுத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர் .