மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரின் இடமாற்றத்தினை இடைநிறுத்துமாறு வலியுறுத்தியும், புதிய பிரதி விவசாய பணிப்பாளரின் நியமனத்தினை நிறுத்துமாறு
கோரியும் விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்துவந்த விவசாயிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மாவட்டத்தின் விவசாயத்துறையில் தங்களது தேவைப்பாடுகளை சிறப்பான முறையில் தற்போதைய பிரதி விவசாயப்பணிப்பாளர் பேரின்பராஜா பூர்த்திசெய்துவந்துள்ளதுடன்
தங்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் செய்துவருவதாகவும், புதிய பிரதிப்பணிப்பாளர் நியமனம் செய்யப்படுதலானது தமது விவசாய செயற்பாடுகளுக்கு பாதிப்பாக அமையும்
எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
தற்போதைய மட்டக்களப்பு பிரதி விவசாய பணிப்பாளரின் சேவை எமக்கு தேவை,இடமாற்றத்தினை இரத்துச்செய்,விவசாயத்தை தழைக்கச்செய்ய வழிவிடுங்கள், உயர் அதிகாரிகளே ஊமையாகாதீர்கள், கௌரவ ஆளுனரே உதவி செய்யுங்கள் போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
கிழக்கு மாகாண ஆளுனர் தலையிட்டு, இடமாற்றத்தினை இரத்துச்செய்து விவசாயிகளுக்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.





