(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றைய தினம் இடம் பெற்று முடிந்திருக்கின்றது. இந்தக் கூட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி ஏற்பட்டிருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (25) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வூடகச் சந்திப்பு புதன்கிழமை (26) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-
இந்த அதிருப்தியானது மக்கள் பிரதிநிதிகளால் ஏற்படுகின்றது என்பது மக்கள் மத்தியில் பரவலாக்கப்பட்டிருக்கின்றது. இதில் உண்மைத் தன்மையும் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்தி குழு இணைத் தலைவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். துணைத்தலைவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். பதவி ரீதியாக ஆளுநர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இதையொட்டி 14 பிரதேச செயலகங்களுக்குமாக பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற கூட்டத்தில் மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள், கிழக்கு மாகாண சபையுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள், மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலங்கள், திணைக்கள தலைவர்கள் அனைவரும் திட்டமிட்டவாறு பல மாதங்கள் ஆலோசனை செய்து திட்டமிட்டு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விடயங்களைப் பேசித் தீர்வு காண்பதற்காக அந்தக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.
திணைக்கள தலைவர்களைப் பொறுத்தவரையில் இவர்கள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஏனெனில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகளுக்கிடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆரோக்கியமான முறையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றதா? என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் தொக்கி நிற்கின்றது.
மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான களம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டமோ, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டமோ அல்ல. இதனைப் பிரச்சனைக்குரிய மக்கள் பிரதிநிதிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வருட கால யுத்தத்திற்கு பிற்பாடு அடிபட்டு இருந்த மக்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தின் நிறைவில் காத்திரமாக அல்லது சந்தோஷமாக செல்கின்றார்களா என்றால் அது ஒரு கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக முரண்பாடுகள் ஏற்படுகின்ற சில மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்துடன் அதாவது நேற்று இடம்பெற்ற கூட்டத்துடன் கடைசியும் முதலாக திருந்திக் கொள்ள வேண்டும்.
திருந்திக் கொள்ளாத பட்சத்தில் மக்கள் அவர்களுக்கு எதிராக வெகுஜன ரீதியாக போராடுவதற்கான சூழ்நிலை உருவாகும் என்கின்ற செய்தியை நான் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு பொன்னான நாள். 88 ஆம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை 35 வருடங்களை தாண்டி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பல பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று, இந்த 35 வருடங்களை நிறைவு செய்திருக்கின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி இந்தியாவுக்கு கடந்த வாரம் சென்று, இந்திய ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் ஒரு வலுவான அதிகாரப் பரவலாக்கம் தமிழர்களுக்கு சாதகமாகச் செய்ய வேண்டுமென இந்தியா கூறுகின்ற நிலையில், ஜனாதிபதி இன்று கொழும்பில் சகல கட்சிகளையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது வரவேற்கத்தக்க விடயம்தான்.
இலங்கை- இந்திய ஒப்பந்தம் என்பது ஏற்கனவே இலங்கை அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட ஒரு விடயம். இதில் தமிழ்த் தலைவர்கள் தெளிவாக இருந்து கொள்ள வேண்டும்.
பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களாகும். அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகச் சில விடயங்களில் தான் முரண்பாடுகள் காணப்படுகின்றது.
நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயங்களில் காணி மற்றும் பொலிஸ் தொடர்பான விடயங்களை அமல்படுத்துவதா? இல்லையா? என சிங்கள தேசியவாதம் தமிழ் மக்கள் தொடர்பாக நம்பிக்கையீனம் காரணமாக பல கருத்துக்களை முன்வைக்கின்ற நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் ஊடாக இன்று கொழும்பில் தமிழ் தலைமைகளை ஜனாதிபதி அழைத்து பேசுவது என்பது ஒரு பொற்காலமே.
இந்நிலையில் ஏற்கனவே உள்ள விடயங்களை அமுலாக்குவதற்குத் தமிழ்த் தலைமைகள் தவறி விடக்கூடாது. தமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரையில் இன்றைய பேச்சு வார்த்தை ஊடாக 13 ஆவது இலுள்ள விடயங்களை அமல்படுத்துவதற்கு சரியான ஒரு செயல் வடிவத்தை கொடுக்க வேண்டும்.
35 வருடங்களின் பிற்பாடு இவ்வாறான ஒரு விடயம் வருவது என்பதனை நாங்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். இதை நாங்கள் மறுதலிக்கும் பட்சத்தில் சிங்களப் தேசியவாதத்திலுள்ள சில அரசியல் தலைவர்கள் இதை நிராகரிக்க வேண்டும், ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது, இது தனி நாட்டை கூறுகின்ற ஒரு செயல் வடிவம் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு குழப்புவதற்கான முயற்சிகளை எடுப்பர்.
இதில் ஏதாவது இலாப நட்டங்கள் ஏற்படும் பட்சத்தில் இதை மறுக்கின்ற தமிழ்த் தலைமைகள் இதற்குப் பொறுப்புக் கூறியாக வேண்டும். பொறுப்பெடுத்தேயாகவேண்டும்.
ஆகவே இன்று இடம் பெறுகின்ற பேச்சு வார்த்தையின் ஊடாக எதிர்காலத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என நான் கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
இதில் ஒரு சிலருக்கு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். சுயாட்சி அற்ற விடயங்களாக இருக்கலாம். 13 ஆவது திருத்தச் சட்டம் தமிழர்களுக்குரிய நிரந்தர தீர்வு அல்ல. ஆனால் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை 35 வருடங்களின் பிற்பாடு அமல்படுத்துவதற்கு முயற்சிப்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். அதனை அமல்படுத்துவதற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.