தமிழகத்தின் வேளாங்கண்ணி மாதா பசிலிக்கா தேவாலயத்தின் கிளை இலங்கையில் திறந்து வைக்கப்பட்டது.

 


 

உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்களால் விரும்பப்படும் தமிழகத்தின் வேளாங்கண்ணி மாதா பசிலிக்கா தேவாலயத்தின் கிளை அண்மையில்  இலங்கையில் திறந்து வைக்கப்பட்டது.

கற்பிட்டி - உச்சுமுனை  தீவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேவாலயம் தமிழ்நாடு அன்னை வேளாங்கண்ணி தேவாலய அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் கற்பிட்டிக்கு மேலே அமைந்துள்ள உச்சுமுனை கிராமத்தில் தற்போது சுமார் 200 மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கற்பிட்டியில் இருந்து உச்சுமுனை கிராமத்திற்கு செல்வதற்கு மணல் திட்டு இருந்த போதிலும் அது மக்கள் பயணிக்கும் பாதையாக அபிவிருத்தி செய்யப்படாததால் இன்றும் உச்சுமுனை தீவு என்றே அழைக்கப்படுகின்றது.

பாரம்பரிய குடியேற்றங்களைக் கொண்ட உச்சுமுனை கிராமத்தில் இன்றும் முறையான குடிநீர் அமைப்போ, மின்சார அமைப்போ ஏற்படுத்தப்படவில்லை.

எனவே, குப்பி விளக்குகளால் வீடுகள் ஒளிரும் இந்தத் தீவின் மக்கள், தீவில் உள்ள துளைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு தங்கள் தாகத்தைத் தணிக்கின்றனர்.

உச்சுமுனைப் பாடசாலையில் 12 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர், 8 தரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறான சூழலில் உச்சுமுனை பிரதேச மக்கள் தமது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அண்மையில் கொண்டிருந்தனர்.

ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்ற தமிழ்நாட்டில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பசிலிக்கா ஆலயத்தின் ஒரு கிளையை நிறுவுவதே அந்த நம்பிக்கையாகும்.

மீனவப் படகுகள் அணிவகுத்து தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்ட வேளாங்கண்ணி மாதாவின் திருவுருவச் சிலை அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர்  சிலாபம் மறைமாவட்ட ஆயர் வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகையால் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது.

திருப்பலியின் இறுதியில் அன்னை வேளாங்கண்ணியின் திருச்சொரூப ஆசீர்வாதமும் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற தமிழ்நாடு அன்னை வேளாங்கண்ணி தேவாலய அதிபர் அருட்தந்தை இருதயராஜ் ஆண்டகையும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.