மட்டக்களப்பு மாவட்டம் விவசாய துறையில் பாரிய முன்னேற்றமடைந்து வருவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கே.கருணாகரன் கலந்துகொண்டதுடன், விவசாயிகளிற்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலான ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
இதன்போது தொடர்ச்சியாக மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளான நெல்லிற்கான விலை 120 ரூபாயாக கூட்டப்படவேண்டியதன் முக்கியத்துவம், முகத்துவாரம் வெட்டப்பட வேண்டியதன் அவசியம், விவசாயிகளுக்கான இலவச பசளை விநியோகம், காலநிலை மாற்றத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள், நீர்ப்பாசனம், மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பல தீர்க்கமான முடிவுகள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது எட்டப்படவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு ஜப்பான் அரசினால் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள யூரியா உரம் தொடர்பாக இதன்போது விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர்கள், பிரத்தியேக செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) வீ.பேரின்பராசா, மட்டக்களப்பு பிராந்திய பிரதி மாகாண நீர்பாசன பணிப்பாளர் வே.இராஜகோபாலசிங்கம், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என துறைசார் அதிகாரிகள் பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.