"நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவோம் - கதிர்காம பாதயாத்திரை நிகழ்வு - 2023"

 
 















 




 






























தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தேசிய ரீதியாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முன்னெடுக்கும் இன நல்லிணக்கத்திற்கான கதிர்காம பாத யாத்திரை நிகழ்வு இன்று 13.06.2023 திகதி
காலை 10.00 மணியளவில் மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து யாத்திரை முன்னெடுக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கே.கருணாகரன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் இளைஞர் சேவைகள் அதிகாரியுமான சீ.யோகேஸ்வரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத்சந்திரபால, மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கலாராணி, திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் கொட்டின்கடுவ, அம்பாறை மாவட்ட உதவிப்பாளர் கங்கா சந்தமாலி, முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் குகேந்திரா, சித்தர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள், இந்து பௌத்த சங்கத்தின் பிரதிநிதிகள். இராமகிருஸ்ண மிசன் சுவாமி விஸ்ணு மகராஷ், ஜெயந்திபுர விகாராதிபதி தம்மானந்த தேரர், அருட்தந்தை பிறைடன் அடிகளார் மற்றும் மெளழவி எம்.எஃப்.பாகிம், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி ஆகியோரின் பிரதான பங்கு பற்றுதலுடன் குறித்த பாதயாத்திரையானது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
150 தமிழ் சிங்கள இளைஞர் யுவதிகள் பங்கேற்கும் இந்நிகழ்வானது ஒரு தேசிய வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த (12) திகதி இரவு மட்டக்களப்பு நகருக்கு இலங்கையின் 25 மாவட்டங்களில் இருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகள் மாமாங்கம் விக்கினேஸ்வரர் திருத்தொண்டர் சபை மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, இன்று (13) திகதி காலை 8.00 மணிக்கு திருத்தொண்டர் மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றதனைத் தொடர்ந்து மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து இளைஞர் யுவதிகள் யாத்திரைக்காக வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதே வேளை சித்தர்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் பாதயாத்திரையாக செல்லவுள்ள 1000 பேர் அடங்கிய யாத்திரியர்களும் இன்று காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து தமது பாத யாத்திரையினை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜீ தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இவ்விரு பாதயாத்திரை குழுவினரும் போரூந்து ஊடாக உகந்தை முருகன் ஆலயத்தை சென்றடைந்து (14) திகதி அங்கிருந்து காட்டுவழி பாதை ஊடாக பாதயாத்திரையாக சென்று (19) திகதி கதிர்காமத்தை சென்றடையவுள்ளதுடன், கதிர்காம கந்தனின் கொடியேற்றத்தில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.