இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் அரசு பயன்பாட்டு மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றுடன், ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று மொழிகளை தவிர வேறு எந்தவொரு மொழியும் இலங்கையின் அரசியலமைப்பில் உள்வாங்கப்படவில்லை.
எனினும், அரசியலமைப்பின் சரத்துக்களுக்கு அப்பாற் சென்று கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் அரச மொழியான தமிழ் மொழி அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடத்திற்கு சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புக்களைத் தொடர்ந்து தமிழ் மொழி பிரதான இடங்களில் சேர்க்கப்பட்டன. ஆனாலும் சீன மொழியின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இந்நிலையில், தற்போது இந்தி மொழியின் ஆதிக்கமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தமிழ் மொழி நீக்கப்பட்டு இந்தி மொழியில் சில தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம், இந்தி மற்றும் சீன மொழிகளில் முறையே காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.